/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பேலுார் அரசு மருத்துவமனையில் 'ஸ்கேன்' இயந்திரம் திருடியவர் கைது
/
பேலுார் அரசு மருத்துவமனையில் 'ஸ்கேன்' இயந்திரம் திருடியவர் கைது
பேலுார் அரசு மருத்துவமனையில் 'ஸ்கேன்' இயந்திரம் திருடியவர் கைது
பேலுார் அரசு மருத்துவமனையில் 'ஸ்கேன்' இயந்திரம் திருடியவர் கைது
ADDED : டிச 22, 2025 05:34 AM

ஹாசன்: பேலுார் தாலுகா அரசு மருத்துவமனையில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, 'ஸ்கேன்' இயந்திரங்கள் திருட்டு போனதால், சுகாதாரத்துறை தர்ம சங்கடத்தில் நெளிகிறது.
ஹாசன் மாவட்டம், பேலுார் தாலுகா அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக, சில ஆண்டுகளுக்கு முன், லட்சக்கணக்கான ரூபாய் செலவில், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரம், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஐ.சி.யு., மானிட்டர்கள் உட்பட பல்வேறு முக்கியமான மருத்துவ உபகரணங்களை, சுகாதாரத்துறை வாங்கியது.
சிறப்பு வல்லுநர்கள் இல்லாத காரணத்தால், இயந்திரங்கள் பயன்படுத்தப்படவில்லை. சமீபத்தில் ஒப்பந்த அடிப்படையில், ரேடியாலஜிஸ்ட் நியமிக்கப்பட்டார். இயந்திரங்களை ஆய்வு செய்ய வந்த போது, மருத்துவமனையில் ஸ்கேன் இயந்திரம் உட்பட, பல்வேறு மருத்துவ சாதனங்கள் திருட்டு போனது தெரிந்தது.
கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, 'டி' குரூப் ஊழியர் பிரதீப், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சூபியான் இருவரும் ஸ்கேன் இயந்திரத்தை கொண்டு செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அவர்களிடம் விசாரித்த போது, பிரதீப்பின் வீட்டில் இருப்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடனை அடைப்பதற்காக, ஸ்கேன் இயந்திரத்தை திருடியதாக கூறியுள்ளார். இயந்திரத்தை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
வல்லுநர்கள் இயந்திரத்தை ஆய்வு செய்ததில், அதில் ஐந்து பேருக்கு ஸ்கேன் செய்திருப்பது தெரிந்தது. கர்ப்பிணியருக்கு சட்டவிரோதமாக ஸ்கேன் செய்து, கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த திருட்டு, சுகாதாரத்துறைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி அனில் கூறியதாவது:
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரத்தை திருடியதற்காக, டி குரூப் ஊழியர் பிரதீப் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் திருடிய ஸ்கேன் இயந்திரத்தில், ஐந்து பேருக்கு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி விசாரணை குழுவினர் தீவிரமாக விசாரித்து, அறிக்கை அளிப்பர்.
மருத்துவமனையில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாக, பொது மக்கள், சங்க, அமைப்புகளிடம் இருந்து புகார் வந்துள்ளது. எனவே 2015 முதல் இதுவரையிலான அனைத்து விஷயங்கள் குறித்தும், விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

