அக்., 1 முதல் தென்மேற்கு ரயில்வேயின் கீழ் வரும் மங்களூரு சந்திப்பு, சென்ட்ரல் ரயில் நிலையங்கள்
அக்., 1 முதல் தென்மேற்கு ரயில்வேயின் கீழ் வரும் மங்களூரு சந்திப்பு, சென்ட்ரல் ரயில் நிலையங்கள்
UPDATED : ஆக 24, 2026 05:38 PM
ADDED : ஆக 23, 2026 11:12 PM

தட்சிண கன்னடா: 'தெற்கு ரயில்வேயின் பாலக்காடு கோட்டத்தின் கீழ் உள்ள மங்களூரு ரயில் நிலையம், அக்டோபர் 1ம் தேதி முதல் தென்மேற்கு ரயில்வேயின் மைசூரு கோட்டத்தின் கீழ் இயங்கப்படும்' என இந்திய ரயில்வே வாரியம் வெளியிட்டு உள்ளது.
தெற்கு ரயில்வேயின் பாலக்காடு கோட்டத்தின் கீழ், மங்களூரு சென்ட்ரல், மங்களூரு சந்திப்பு உட்பட உல்லால் ரயில் நிலையங்கள் இருந்தன. 2003ல் தென்மேற்கு ரயில்வே மண்டலம் உருவாக்கப்பட்டது.
அன்று முதல், கர்நாடகாவின் கடலோர பகுதியான மங்களூரை, அதன் சொந்த மாநில ரயில்வே மண்டலத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
கொண்டாட்டம்
இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின், அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது.
'தெற்கு ரயில்வே கேரளாவின் பாலக்காடு கோட்டத்தின் கீழ் இருந்த மங்களூரு சென்ட்ரல், மங்களூரு சந்திப்பு உட்பட உல்லால் ரயில் நிலையங்கள், அக்டோபர் 1ம் தேதி முதல், தென்மேற்கு ரயில்வேயின் மைசூரு கோட்டத்தின் கீழ் இயங்கும்' என்று இந்திய ரயில்வே வாரியம் அறிவித்து உள்ளது.
மங்களூரில் இருந்து தினமும் தமிழகத்தின் சென்னை, திருச்சிக்கு தலா ஒரு ரயிலும்; கோயம்புத்துாருக்கு இரண்டு ரயில்களும், வாரத்தில் ஒரு நாள் ராமேஸ்வரத்துக்கு ஒரு ரயிலுக்கும் இயக்கப்படுகிறது.
மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையம், ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் ரயில் நிலையமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை அறிந்த மங்களூரு உட்பட கர்நாடக மக்கள், கொண்டாடி வருகின்றனர்.
எதிர்ப்பு
அதேவேளையில், இந்திய ரயில்வே வாரியத்தின் முடிவுக்கு, கேரளம் அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.முக்கியத்துவம் வாய்ந்த மங்களூரு ரயில் நிலையம் மற்றும் மங்களூரு சந்திப்பு பகுதி, பாலக்காடு கோட்டத்திலிருந்து நீக்கப்பட்டால், அந்த கோட்டத்தின் வருவாய் பாதிக்கும். இதனால் பாலக்காடு கோட்டத்தின் எதிர்கால ரயில்வே வளர்ச்சி பணிகள் முடங்கும்.
இந்த எல்லை மாற்றும் முடிவு பற்றி, ரயில்வே வாரியம், கேரளம் அரசிடம் எந்த ஆலோசனையும் நடத்தாமல், தன்னிச்சையாக எடுத்துள்ளதாகவும், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளதாக அறிவித்து உள்ளது.
