/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புலிகளிடம் இருந்து தப்ப விவசாயிகளுக்கு முகமூடி
/
புலிகளிடம் இருந்து தப்ப விவசாயிகளுக்கு முகமூடி
ADDED : நவ 16, 2025 10:55 PM

மைசூரு: மைசூரு மாவட்டத்தின் நுகு வனவிலங்குகள் சரணாலயம், பண்டிப்பூர் புலிகள் சரணாலய பகுதியின், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளை, புலிகளிடம் இருந்து பாதுகாக்க, வனத்துறை சார்பில் முகமூடிகள் வழங்கப்படுகின்றன.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களின் வயல்களில், புலிகள் நடமாடுகின்றன. அக்டோபர் 16 முதல் நவம்பர் 7 வரை, நான்கு விவசாயிகள் புலிகளின் தாக்குதலுக்கு ஆளாகினர். பண்டிப்பூர், நாகரஹொளே புலிகள் சரணாலய பகுதியில் உள்ள ஹெச்.டி.கோட்டே, சரகூரு, நஞ்சன்கூடு தாலுகாக்களின் வனப்பகுதியை ஒட்டியுள்ள வனத்தில், 20 புலிகள் அடையாளம் காணப்பட்டன.
இது புலிகளின் இன விருத்தி காலம் என்பதால், புலிகள் துணையை தேடி அலைகின்றன. குட்டி போட்டுள்ள தாய் புலிகளும் உள்ளன. இந்த புலிகள் எதிரே வரும் விவசாயிகளை தாக்குகின்றன. இவர்களை காப்பாற்ற முகமூடிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை கழுத்து, தலையின் பின்புறம் அணிந்து கொண்டால், விவசாயிகள் மீது பாய புலிகள் தயங்கும்.
புலிகளின் அச்சுறுத்தலால், சபாரி நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பண்டிப்பூர், நாகரஹொளே வனத்துறை ஊழியர்கள், விவசாயிகளுக்கு முகமூடிகள் வழங்கும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். புலிகள் முதலில் மனிதர்களின் கழுத்தை பிடிப்பதால், விவசாயிகள் பின்னந்தலையில் முகமூடி அணிய வேண்டும். இதனால் அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம். இத்தகைய திட்டம், மேற்கு வங்கத்தின் சுந்தர்பன தேசிய பூங்காவில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த ஓரு மாதத்தில், நான்கு புலிகள் பிடிக்கப்பட்டன. அதில் ஆண் புலியே, இரண்டு விவசாயிகளை கொன்றுள்ளது. புலிகள் நடமாட்டம் இருப்பதால், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தினர் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

