/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ கட்டணம் உயர்வு 'ஏசி' பஸ்களை விட குறைவு
/
மெட்ரோ கட்டணம் உயர்வு 'ஏசி' பஸ்களை விட குறைவு
ADDED : பிப் 11, 2025 06:37 AM

பெங்களூரு: 'ஆட்டோ, டாக்சி, 'ஏசி' பஸ்களுடன் ஒப்பிட்டால், மெட்ரோ ரயில் கட்டணம் குறைவுதான்' என பெங்களூரு மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் பஸ் டிக்கெட் கட்டணம், பால் விலையை தொடர்ந்து மெட்ரோ ரயில் பயண கட்டணமும் 46 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்டண உயர்வை திரும்ப பெறும்படி வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து, மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை;
பல ஆண்டுகளாக மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இப்போது உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் ஆட்டோ, கேப், டாக்சி, 'ஏசி' பஸ்களின் கட்டணத்துடன் ஒப்பிட்டால், மெட்ரோ ரயில் பயண கட்டணம் குறைவுதான்.
மெட்ரோ ரயிலில் 2 கி.மீ., துாரம் பயணிக்க, வெறும் 10 ரூபாய் செலவாகிறது. ஆனால் ஆட்டோவில் 30 ரூபாய், டாக்சியில் 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்.
மெட்ரோவில் 25 முதல் 30 கி.மீ., துாரம் பயணிக்க 90 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இதே துாரம் ஆட்டோவில் பயணித்தால், 390 முதல் 450 ரூபாய் கொடுக்க வேண்டும்.
டாக்சியில் பயணிக்க, 678 முதல் 748 ரூபாய் வரை செலவாகும். 'ஏசி' பஸ்களின் பயண கட்டணமும் அதிகம் தான். இந்த புள்ளி - விபரங்களை ஆய்வு செய்தால், இப்போதும் மெட்ரோ பயண கட்டணம் குறைவாகவே உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.