/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருடர்களுடன் தொடர்பு: 2 ஆண்டில் 88 போலீசார் கைது மேல்சபையில் அமைச்சர் தகவல்
/
திருடர்களுடன் தொடர்பு: 2 ஆண்டில் 88 போலீசார் கைது மேல்சபையில் அமைச்சர் தகவல்
திருடர்களுடன் தொடர்பு: 2 ஆண்டில் 88 போலீசார் கைது மேல்சபையில் அமைச்சர் தகவல்
திருடர்களுடன் தொடர்பு: 2 ஆண்டில் 88 போலீசார் கைது மேல்சபையில் அமைச்சர் தகவல்
ADDED : டிச 19, 2025 05:13 AM

பெலகாவி: ''கர்நாடகாவில் திருடர்களுக்கு உதவிய, அவர்களுடன் தொடர்பில் இருந்த, 88 போலீசார் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவாகியுள்ளது,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
மேல்சபையில் கேள்வி நேரத்தில், ம.ஜ.த., உறுப்பினர் சரவணாவின் கேள்விக்கு பரமேஸ்வர் அளித்த பதில்:
எந்த காரணத்தை கொண்டும், குற்றங்களில் போலீசார் ஈடுபடக்கூடாது. ஒரு வேளை யாராவது குற்றவாளிகளுடன் தொடர்பில் இருப்பது, குற்றங்களில் ஈடுபடுவது தெரிந்தால், அவர்கள் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவர். கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் உறுதியானால் பணியில் இருந்து நீக்கப்படுவர்.
ஏற்கனவே உள்துறை, சட்டத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. துறையின் அனுமதி கிடைத்தால், குற்றங்களில் ஈடுபடும் போலீசார், பணியில் இருந்தே நீக்கப்படுவர். நாங்கள் யாருக்கும் கருணை காட்ட மாட்டோம். அனைவருக்கும் சட்டம், நியாயம் ஒன்று தான். தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
சில போலீசார் தவறு செய்தனர் என்பதற்காக, போலீஸ் துறையையே சந்தேக கண்ணோடு பார்ப்பது சரியல்ல. துறையில் உள்ள அனைவரும் குற்றவாளிகள், திருடர்கள், கொள்ளையர்களுடன் தொடர்புள்ளவர்கள் என்று கருத வேண்டாம். போலீஸ் துறையில் உள்ள பல அதிகாரிகள் நேர்மையுடன் பணியாற்றுகின்றனர். அனைவரையுயும் ஒரே தராசு தட்டில் வைப்பது சரியல்ல.
வேறு மாநிலங்களுடன் ஒப்பிட்டால், கர்நாடகாவில் சட்டம் - ஒழுங்கு எப்படி உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். மற்ற மாநிலங்களின் சட்டம், அங்குள்ள நிர்வாகம் பற்றி நான் பேசமாட்டேன். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், கர்நாடகாவில் சட்டம் - ஒழுங்கு நன்றாகவே உள்ளது.
போலீசார் சிறப்பாக பணியாற்றுவதால், பல வழக்குகளை கண்டுபிடித்துள்ளனர். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், அங்கொன்றும், இங்கொன்றுமாக தவறுகள் நடக்கின்றன. போலீசார் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என, எச்சரித்துள்ளோம். மாதந்தோறும், உயர் அதிகாரிகள், தங்களுக்கு கீழே பணியாற்றும் போலீசாரின் பணித்திறனை ஆய்வு செய்கின்றனர்.
எங்கள் அரசு வந்த பின், குற்றங்கள் அதிகரித்தன, சட்டம் - ஒழுங்கு பாழானதாக கூறுவது சரியல்ல. இதற்கு முன்பும், குற்றங்கள் நடந்தன. வரும் நாட்களிலும் நடக்கக்கூடும். அந்தந்த காலத்துக்கு சட்டத்தை காப்பாற்றி, அமைதி நிலவ செய்வது அரசின் கடமை.
மாநிலத்தில் 1,999 போலீஸ் நிலையங்கள் உள்ளன. 1.06 லட்சம் போலீசார் உள்ளனர். இவர்களை குற்றவாளிகளுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என, உத்தரவிட்டுள்ளோம். ஆனாலும், சிலர் வழக்குகளில் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், திருடர்களுக்கு உதவிய, அவர்களுடன் தொடர்பில் இருந்தது தொடர்பாக, 88 போலீசார் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

