ஒரே கட்டடத்தில் 172 மாணவர்கள் விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு
ஒரே கட்டடத்தில் 172 மாணவர்கள் விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு
ADDED : செப் 08, 2026 03:53 AM

ஹாசன்: ஹாசன் அருகே, ஒரே கட்டடத்தில் 172 மாணவர் களை தங்க வைத்த விவகாரத்தில், விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா உத்தரவிட்டுள்ளார்.
ஹாசன் தாலுகா, சாந்தி கிராமத்தில் உள்ள பெரிய பாழடைந்த கட்டடத்தில், உண்டு உறைவிட பள்ளியின் 92 மாணவர்கள், 80 மாணவியர் என 172 பேருக்கு ஒரே இடத்தில் வகுப்பு நடத்தப்பட்டது. அங்கேயே அவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டு, இரவு துாங்கும் அறையாகவும் பயன்படுத்தினர்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்த அவலம் நடந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், மாணவர்கள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்ட விவகாரம் வெளியே வந்தது. மொத்தம் 172 மாணவர்களுக்கு 5 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன; அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை என்று, கன்னட செய்தி தொலைக்காட்சிகளில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 5 ஆண்டுகளாக மாணவர்கள் இந்த கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாட்டு தொழுவம் போன்ற கட்டடத்தில் மாணவர்கள் அடைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
வீடியோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா, ஐந்து ஆண்டுகளாக ஒரே கட்டடத்தில் மாணவர்கள் தங்க வைக்கப்பட்டது ஏன்; யார் தவறு செய்தனர் என்று குறித்து விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய, அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். ஹாசன் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சிவலிங்கே கவுடாவும், சமூக நலத்துறை அதிகாரிகளிடம், 'இவர்கள் என்ன மாணவர்களா அல்லது மந்தையில் அடைக்கும் ஆடுகளா; இப்படி நடந்து கொள்வது சரியல்ல' என்று ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். ஒரு வாரத்தில் மாணவர்களை தங்க வைக்க மாற்று ஏற்பாடுகளை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்களை தங்க வைக்க விடுதி கட்டும் பணி நடக்கிறது. இன்னும் நான்கு மாதங்களில் பணிகள் நிறைவு பெற்றதும், மாணவர்கள் அங்கு தங்க வைக்கப்படுவர். அதுவரை உயர்தர வசதிகளுடன் கூடிய இடத்தில் அவர்களை தங்க வைப்போம்' என்றனர்.
