/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சர் சிவராஜ் தங்கடகி, எம்.பி., ராஜசேகர ஹிட்னால்... துரோகிகள்!: காங்., 'மாஜி' அமைச்சர் இக்பால் அன்சாரி ஆவேசம்
/
அமைச்சர் சிவராஜ் தங்கடகி, எம்.பி., ராஜசேகர ஹிட்னால்... துரோகிகள்!: காங்., 'மாஜி' அமைச்சர் இக்பால் அன்சாரி ஆவேசம்
அமைச்சர் சிவராஜ் தங்கடகி, எம்.பி., ராஜசேகர ஹிட்னால்... துரோகிகள்!: காங்., 'மாஜி' அமைச்சர் இக்பால் அன்சாரி ஆவேசம்
அமைச்சர் சிவராஜ் தங்கடகி, எம்.பி., ராஜசேகர ஹிட்னால்... துரோகிகள்!: காங்., 'மாஜி' அமைச்சர் இக்பால் அன்சாரி ஆவேசம்
ADDED : அக் 07, 2025 04:53 AM

கொப்பால் காங்கிரசில், நாளுக்கு நாள் குழப்பம் அதிகரிக்கிறது. தலைவர்கள் இடையே பனிப்போர் நடக்கிறது.
கங்காவதி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., இக்பால் அன்சாரி, மாவட்ட தலைவர்கள் தங்களை ஓரங்கட்ட முயற்சிப்பதாக, கோபத்தில் இருக்கிறார். 2023 சட்டசபை தேர்தலில், கங்காவதி தொகுதியில் தன் தோல்விக்கு, சொந்த கட்சியினரே உள்குத்து வேலை செய்தனர் என, பல முறை பகிரங்கமாக புலம்பினார்.
பல்வேறு பணிகளை துவக்கி வைக்க, முதல்வர் சித்தராமையா நேற்று கொப்பாலுக்கு வந்தார். பணிகளின் துவக்க விழாவுக்கு, இக்பால் அன்சாரிக்கு அழைப்பு விடுக்கவில்லை என, கூறப்படுகிறது. இது, அவரது கோபத்தை அதிகமாக்கியுள்ளது.
இது குறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி:
நான் முஸ்லிம் என்பதால், என்னை அரசியல் ரீதியில் மிதிக்க முயற்சிக்கின்றனர். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், அமைச்சராவேன் என்ற காரணத்தால், சொந்த கட்சியினரே எனக்கு எதிராக சதி வேலைகள் செய்தனர். அனைவரும் சேர்ந்து, சுரங்க உரிமையாளர் ஜனார்த்தன ரெட்டியை ஆதரித்து, வெற்றி பெற வைத்தனர். என்னை தோற்கடித்தனர்.
கொப்பால் மாவட்டத்தில், இன்று (நேற்று) முதல்வர் சித்தராமையா பங்கேற்கும் நிகழ்ச்சியிலும், எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. முன்னாள் அமைச்சராக இருந்தும், கட்சி தலைவர்கள் என்னை ஒதுக்கியுள்ளனர். முதல்வருக்கு மிகவும் நெருக்கமான பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, முதல்வரின் நிதி ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி, கொப்பால் காங்., -- எம்.பி., ராஜசேகர ஹிட்னால், எம்.எல்.ஏ., ராகவேந்திர ஹிட்னால் ஆகியோர் துரோகிகள்.
இவர்கள், என்னை பற்றி, முதல்வரிடம் தவறான தகவல் தருகின்றனர்.
இன்றைய பணிகள் துவக்க விழாவுக்கு, இக்பால் அன்சாரி அதிகமான மக்களை அழைத்து வரவில்லை. எம்.பி., ராஜசேகர ஹிட்னாலே, நேரடியாக கங்காவதிக்கு சென்று மக்களை திரட்டி அழைத்து வந்தாக, முதல்வரிடம் பொய் கூறினர்.
நான், 224 பஸ்களில் மக்களை முதல்வரின் நிகழ்ச்சிக்கு அழைத்து வர, ஏற்பாடு செய்தேன். ஆனால் இந்த பணியை, தானே செய்ததாக எம்.பி., கூறிக் கொள்கிறார். நற்பணிகளை தாங்களே செய்ததாக பெருமை பேசும் காங்கிரஸ் தலைவர்கள், கட்சிக்கு ஏதாவது கஷ்டம் வந்தால், ஒளிந்து கொள்கின்றனர்.
எனக்கு எதிராக கோஷ்டி சேர்த்து கொண்டு, சதி செய்கின்றனர். இவர்களால் நான் அனுபவிக்கும் தொந்தரவுகள் குறித்து, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, முஸ்லிம் சமுதாயத்தினரிடமும், கட்சி தொண்டர்களிடமும் விவரிப்பேன். ராஜசேகர ஹிட்னால், ராகவேந்திர ஹிட்னால் மற்றும் பசவராஜ் ராயரெட்டி ஆகியோரை, எப்போதும் நம்பாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பின் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேசிய இக்பால் அன்சாரி, 'கட்சியில் எனக்கு எதிராக, கூட்டு சதி நடக்கிறது. என்னை பற்றி தலைவர்கள் புகார் கூறினால், அதை நம்பாதீர்கள். ஒரு மனதாக முடிவு எடுக்காதீர்கள். என் கருத்துகளையும் கேளுங்கள். அதன்பின் முடிவு செய்யுங்கள்' என, வேண்டுகோள் விடுத்தார்.