ADDED : ஜூன் 26, 2026 01:07 AM

பெங்களூரு: கர்நாடக கலால் துறை உதவி கமிஷனர் மஞ்சுநாத். இவர், பொதுப் பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் மைத்துனர் ஆவார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததுடன், சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக மஞ்சுநாத் மீது எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அவரது வீடு, பினாமிகள் வீடுகளில், நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 6:30 மணிக்கு துவங்கிய சோதனை, நேற்று காலை 6:30 மணிக்கு மணிக்கு நிறைவு பெற்றது. பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள வீட்டில் மஞ்சுநாத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. மைசூரில் வசித்த அவரது பெண் தோழி யமுனா விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
நேற்று காலையில், பெங்களூரில் இருந்து பெலகாவிக்கு சென்ற மஞ்சுநாத், பெலகாவியில் உள்ள தன் வீட்டில், ஆடிட்டர் பிரவீன் காலேயுடன் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக செல்லும் போது, என்னென்ன ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும் என்பது உட்பட பல விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர்.
அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் போது, மஞ்சுநாத் தன் மனைவி பெயரிலும் சொத்துகள் வாங்கி குவித்ததும் தெரிய வந்துள்ளது. சதீஷ் ஜார்கிஹோளி மகன் ராகுலுடன், பண விவகாரங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பறிமுதல் இந்நிலையில், நேற்றிரவு அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், 'மஞ்சுநாத், அவரது கூட்டாளிகள், குடும்ப உறுப்பினர்கள் வீடுகள் நடத்திய சோதனையின் போது 5.50 கோடி ரூபாய் ரொக்கம், 7.80 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், 3.30 லட்சம் ரூபாய் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
'மதுக்கடைகளில் இருந்து எவ்வளவு லஞ்சம் வாங்கப்பட்டது என்று குறித்து வைத்திருந்த, ஊழல் நோட்டு கைப்பற்றப்பட்டு உள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
