/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மேலிடத்தில் துணை முதல்வர் அறிக்கை பதவி பறிப்பு பீதியில் அமைச்சர்கள்
/
மேலிடத்தில் துணை முதல்வர் அறிக்கை பதவி பறிப்பு பீதியில் அமைச்சர்கள்
மேலிடத்தில் துணை முதல்வர் அறிக்கை பதவி பறிப்பு பீதியில் அமைச்சர்கள்
மேலிடத்தில் துணை முதல்வர் அறிக்கை பதவி பறிப்பு பீதியில் அமைச்சர்கள்
ADDED : டிச 05, 2025 08:52 AM

பெங்களூரு: முதல்வர் சித்தராமையா கோஷ்டியில், அடையாளம் காணப்பட்டு தனக்கு எதிராக செயல்பட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் குறித்து, மாநில காங்கிரஸ் தலைவரான துணை முதல்வர் அறிக்கை அளித்ததால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் நடுக்கத்தில் உள்ளனர்.
துணை முதல்வர் சிவகுமார், நேற்று திடீரென டில்லிக்கு சென்றார். கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார். கட்சியை பலப்படுத்த ஒத்துழைப்பு தராத அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலை அளித்தார்.
அப்போது, 'இவர்கள் கட்சியால் லாபம் அடைந்தவர்கள். ஆனாலும் கட்சியை பலப்படுத்துவதில், இவர்களின் பங்களிப்பு ஏதும் இல்லை. இதற்கு முன் ஓட்டு திருட்டை கண்டித்து, போராட்டம் நடத்துவது, உறுப்பினர் பதிவு உட்பட, காங்கிரஸ் சார்பில் பல திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதில் பங்கேற்று கட்சியை பலப்படுத்தும்படி, அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும் மேலிடம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், முதல்வர் சித்தாரமையா ஆதரவு கோஷ்டியில் உள பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கட்சியை பலப்படுத்துவதில், ஆர்வம் காட்டவில்லை. இவர்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பொருட்படுத்தவில்லை.
அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் போது, இத்தகைய அமைச்சர்களை நீக்க வேண்டும். இதேபோன்று நடந்து கொள்ளும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, அடுத்த சட்டசபை தேர்தலில் சீட் கொடுக்க கூடாது' என, வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
துணை முதல்வரின் அறிக்கை, பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் அளித்துள்ள பட்டியலில், செல்வாக்கு மிக்க அமைச்சர்கள், சித்தராமையாவுக்கு நெருக்கமான அமைச்சர்களின் பெயர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
கட்சி மற்றும் அரசின் பொறுப்புகளை கவனிப்பதற்கு பதில், தேவையின்றி பேசி குழப்பங்களை ஏற்படுத்தும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை தட்டி வைக்க மேலிடம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

