/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஹனி டிராப்' விவகாரம் மேலிட செல்வாக்கை இழக்கும் அமைச்சர்கள்
/
'ஹனி டிராப்' விவகாரம் மேலிட செல்வாக்கை இழக்கும் அமைச்சர்கள்
'ஹனி டிராப்' விவகாரம் மேலிட செல்வாக்கை இழக்கும் அமைச்சர்கள்
'ஹனி டிராப்' விவகாரம் மேலிட செல்வாக்கை இழக்கும் அமைச்சர்கள்
ADDED : ஏப் 02, 2025 03:53 AM

கர்நாடக அரசியலில் ஒரு காலத்தில் பழிவாங்கும் நடவடிக்கை இருந்ததே இல்லை. கொள்கை ரீதியாக கருத்து மோதலில் ஈடுபட்டாலும், பொது இடங்களில் அரசியல்வாதிகள் நட்பாகவே பழகி வந்தனர். ஆனால் 2023ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, அரசியல் களம் வெகுவாக மாறி உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இடையில் முன்பு இருந்தது போன்ற நட்பு, இப்போது இல்லை. பழிவாங்கும் அரசியல் படுஜோராக இருக்கிறது.
ஆளுங்கட்சி - எதிர்க்கட்சிகளுக்கு இடையே தான் மோதல் ஏற்படுகிறது என்று பார்த்தால், ஆளுங்கட்சியில் உள்ளுக்குள்ளேயே ஒருவருக்கு ஒருவர் அரசியல் வாழ்க்கைக்கு, குழி தோண்டும் முயற்சியும் நடக்கிறது.
கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது தன்னை ஹனி டிராப் செய்ய முயற்சி நடந்ததாக, கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா பெரிய குண்டை துாக்கிப் போட்டார். இவர் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவு அணியில் உள்ளார்.
துணை முதல்வர் சிவகுமாருக்கு எதிராக, ராஜண்ணா தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார். சிவகுமாரை கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இறக்கிவிட வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்.
இந்த சூழ்நிலையில் தான், ராஜண்ணாவை ஹனி டிராப் செய்ய முயற்சி நடந்துள்ளது. இதில் சிவகுமாரின் பங்கு இருப்பதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா நேரடியாகவே குற்றஞ்சாட்டி இருந்தார். ஆனால் சிவகுமாரோ, ஹனி டிராப் செய்ய முயன்றது பற்றி, போலீசில் புகார் அளிக்கும்படி கூறினார்.
கடும் கோபம்
ஆனாலும் தன்னை ஹனி டிராப் செய்ய முயன்றவர்கள் பற்றிய ஆதாரம், ராஜண்ணாவிடம் இல்லை. போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் ஆதாரங்களை கொடுக்க முடியவில்லை.
மாநில, தேசிய அரசியல் தலைவர்கள், 48 பேரின் வீடியோக்கள் இருக்கும் பென்டிரைவ் உள்ளது என்றும் கூறி ராஜண்ணா பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இதை வைத்து காங்கிரசை, பா.ஜ., விமர்சித்தது. இதனால் அமைச்சர் ராஜண்ணா மீது கட்சி மேலிட தலைவர்கள், கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
'யாரை கேட்டு ஹனி டிராப் விவகாரம் பற்றி, சட்டசபையில் பேசினீர்கள்? உங்களை ஹனி டிராப் செய்ய முயன்றதாக நீங்கள் கூறும் குற்றச்சாட்டுக்கே ஆதாரம் இல்லை. அரசியலுக்காக என்ன வேண்டும் என்றாலும் பேசுவீர்களா?' என, ராஜண்ணாவை மேலிட தலைவர்கள் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் எப்போதும் படபடவென பேசும் ராஜண்ணா, சில நாட்களாக அமைதியாக உள்ளார்.
செம டோஸ்
ராஜண்ணாவை மட்டுமின்றி, ஹனி டிராப் விவகாரத்தில் மேலும் சில அமைச்சர்களுக்கும் கட்சி மேலிடம் செம டோஸ் விட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 'அரசியலில் தேவையின்றி ஹனி டிராப் போன்ற விஷயங்களை கொண்டு வராதீர்கள். இது நல்லதல்ல. தேவையில்லாத வேலைகளை செய்தால், கடும் நடவடிக்கை எடுப்போம்' என எச்சரித்துள்ளது.
ஹனி டிராப் விவகாரத்தால் ராஜண்ணா உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர், கட்சி மேலிடத்திடம் தங்களுக்கு இருந்த செல்வாக்கையும் இழக்க ஆரம்பித்துள்ளனர். இனி இவர்கள் ஏதாவது கூறினால், அதை காது கொடுத்து கேட்கக் கூடாது என்ற முடிவில் மேலிட தலைவர்கள் உள்ளனர். இது அமைச்சர்களுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
- நமது நிருபர் -