ADDED : ஆக 22, 2026 11:21 PM

விஜயபுரா: விஜயபுரா மாவட்டம் முத்தேபிஹால் தாலுஆவின் பளபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாபண்ணா பசப்பா பரகி, 45. இவரது மனைவி லட்சுமிபாய், 40. தம்பதிக்கு நான்கு மகள்களும், மகனும் உள்ளனர். வர மஹாலட்சுமி பண்டிகையை முன்னிட்டு, லட்சுமிபாய் இரண்டு மகள்களை அழைத்து கொண்டு, நேற்று முன் தினம் மதியம் உறவினர் வீட்டின் பூஜையில் பங்கேற்க சென்றிருந்தார்.
கணவர் சாபண்ணாவும், மகள்கள் சாக்ஷி, 15, ரக்ஷிதா,10, மகனும் வீட்டில் இருந்தனர். பூஜை முடிந்து மாலையில் லட்சுமிபாய் வீடு திரும்பிய போது, மகள்களையும், கணவரையும் காணவில்லை. தோட்டம், உறவினர் வீடுகளில் தேடியும் அவர்கள் அங்கு இல்லை. வீட்டின் அருகில் உள்ள திறந்த கிணற்றின் அருகில், கணவர் சாபண்ணாவின் உடைகள் இருந்தன.
பீதியடைந்த லட்சுமிபாய், கிராமத்தினர் உதவியுடன், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த நிடகுந்தி போலீசார், கிணற்றில் தேடினர். சாக்ஷி, ரக்ஷிதாவின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் சாபண்ணாவின் உடல் கிடைக்கவில்லை.
கிராமத்தினரும், போலீசாரும் கிணற்றின் நீரை முழுமையாக காலி செய்து தேடியும் தென்படவில்லை. சிறுமியர் எப்படி கிணற்றில் விழுந்தனர், தற்கொலை செய்து கொண்டனரா அல்லது தந்தையே கிணற்றில் தள்ளி கொன்றாரா என்பது தெரியவில்லை.
சாபண்ணாவை தேடுகின்றனர். போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்துகின்றனர்.
