/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நிரம்பி வழியும் பேத்தமங்களா ஏரி எம்.எல்.ஏ., ரூபகலா அர்ப்பணிப்பு பூஜை
/
நிரம்பி வழியும் பேத்தமங்களா ஏரி எம்.எல்.ஏ., ரூபகலா அர்ப்பணிப்பு பூஜை
நிரம்பி வழியும் பேத்தமங்களா ஏரி எம்.எல்.ஏ., ரூபகலா அர்ப்பணிப்பு பூஜை
நிரம்பி வழியும் பேத்தமங்களா ஏரி எம்.எல்.ஏ., ரூபகலா அர்ப்பணிப்பு பூஜை
ADDED : அக் 11, 2025 11:03 PM

தங்கவயல்: நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் பேத்தமங்களா ஏரி, நிரம்பி மறுகால் செல்கிறது.
பேத்தமங்களா ஏரி, 1,000 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில், தங்கவயலுக்காக குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை, 1903ல் இங்கிலாந்து நாட்டினர் ஏற்படுத்தினர். இங்கிருந்து தான் 2001ம் ஆண்டு வரையில், தங்கவயல் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
அதன் பின், 24 ஆண்டுகளாக தண்ணீர் சப்ளை செய்வது நிறுத்தப்பட்டது. இப்போது, இதன் பெயர், 'கே.ஜி.எப்., வாட்டர் ஒர்க்ஸ்' என்ற பெயரில் உள்ளது.
பேத்தமங்களா ஏரி துார்வாரப்படாததால் போதிய நீர் தேக்கப்படுவதில்லை. இதுமட்டுமின்றி, சிக்கபல்லாப்பூர் மாவட்டம் நந்தி மலையில் பிறக்கும் பாலாற்று நீர், பேத்தமங்களா ஏரிக்கு வரும் முன்பே, இடைமறித்து, விவசாயத்துக்கு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக பேத்தமங்களா ஏரியில் நீர் நிரம்பவே இல்லை. கடைசியாக 2021 அக்டோபர் 15ல் பேத்தமங்களா ஏரி நிரம்பியது.
அண்மையில் ஒருவாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், பேத்தமங்களா ஏரி நிரம்பி உள்ளது.
தங்கவயல், பங்கார்பேட்டை, கோலார் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர், பேத்தமங்களா ஏரி நிரம்பி, தண்ணீர் வெளியேறுவதை பார்த்துச் செல்கின்றனர்.
இதற்கிடையில், தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, ஏரியில் அர்ப்பணிப்பு பூஜை செய்தார். நேற்று பிற்பகல் நாதஸ்வரம் முழங்க, சம்பிரதாய முறைப்படி ஏரிக்கரையில் கங்கா பூஜைகள் நடத்தினார்.
மஞ்சள், குங்குமம், பூக்கள், பட்டுச் சேலை உட்பட மங்கள பொருட்களை மூங்கில் முறத்தில் வைத்து ஏரியில் காணிக்கையாக செலுத்தினார். தங்கவயல் கிராம பகுதிகளின் பிரமுகர்கள், குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
'இன்று போல் என்றும்' கடல் போல் பேத்தமங்களா ஏரி வற்றாமல் நிரம்பி இருக்க வேண்டும் என்று வேண்டினர்.
எம்.எல்.ஏ., ஆன பின், இரண்டாவது முறையாக ஏரியில் ரூபகலா அர்ப்பணிப்பு பூஜை செய்தார்.