பிரஜ்வல் அறையில் மொபைல் போன்; அதிகாரிகளுக்கு டி.ஜி.பி., 'டோஸ்'
பிரஜ்வல் அறையில் மொபைல் போன்; அதிகாரிகளுக்கு டி.ஜி.பி., 'டோஸ்'
ADDED : ஆக 15, 2026 01:35 AM

பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, முன்னாள் எம்.பி., பிரஜ்வலின் அறையில் மொபைல் போன் சிக்கிய விவகாரத்தில், சிறைத்துறை அதிகாரிகளை டி.ஜி.பி., அலோக் குமார் கடுமையாக கண்டித்தார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், சி.சி.பி., போலீசார் நடத்திய சோதனையில், முன்னாள் எம்.பி., பிரஜ்வல் அறையிலிருந்து மொபைல் போன், பென்டிரைவ் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், சிறைத்துறை டி.ஜி.பி., அலோக்குமார் பரப்பன அக்ரஹாரா சிறையில் நேற்று திடீர் சோதனை செய்தார். சிறைத்துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தினார். அப்போது, பிரஜ்வலின் அறைக்குள் மொபைல் போன் எப்படி வந்தது என அதிகாரிகளை கண்டித்தார். கைதிகளுக்கு உதவுவதை சிறைத்துறை அதிகாரிகள் கைவிடுமாறு அறிவுறுத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
நீண்ட நாட்களாக பரப்பன அக்ரஹாரா சிறையில் சோதனை நடத்தப்படவில்லை. சிறையிலிருந்தபடி பிரஜ்வல் மொபைல் போன் பேசுவது போன்று வெளியான வீடியோ குறித்து சி.சி.பி., விசாரிக்கிறது.
எனது தலைமையில் பொதுவான சோதனை நடந்தது. இது குறித்த விபரங்கள் பின் தெரிவிக்கப்படும். வெவ்வேறு சிறை அறைகளில் உள்ள பிரச்னைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன்.இவ்வாறு அவர் பேசினார்.
