பரப்பன அக்ரஹாரா சிறையில் சோதனை மொபைல் போன்கள் கண்டெடுப்பு
பரப்பன அக்ரஹாரா சிறையில் சோதனை மொபைல் போன்கள் கண்டெடுப்பு
ADDED : ஜூன் 06, 2026 11:24 PM

பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், சி.சி.பி., போலீசார் திடீர் சோதனை நடத்தினர். மொபைல் போனில் பேசும் போது, கைதி ஒருவர் அதிகாரிகளிடம் சிக்கினார்.
பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா சிறையில், கைதிகளுக்கு அனைத்தும் கிடைக்கின்றன. மொபைல் போன், வெளி உணவு, போதைப்பொருட்கள், பீடி, சிகரெட் என, அனைத்தும் பல ஆண்டுகளாக கிடைக்கின்றன. இது தொடர்பான, வீடியோக்கள், போட்டோக்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன.
பணம் கொடுத்தால், கைதிகளுக்கு வி.ஐ.பி., சலுகைகள் கிடைக்கின்றன என, மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இந்த களங்கத்தை போக்க, உயர் போலீஸ் அதிகாரிகள், அவ்வப்போது சிறையில் திடீர் சோதனை நடத்துகின்றனர்.
ஒவ்வொரு முறை சோதனை நடத்தும் போதும், மொபைல் போன், கஞ்சா, கத்தி, சிம் கார்டு, புகையிலை பொருட்கள் என, சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கின்றன.
இந்நிலையில், இந்த மத்திய சிறையில் மொபைல் போன் பயன்பாடு அதிகரிப்பதாக, தகவல் வந்தது. அதையடுத்து, சி.சி.பி., போலீசார், நேற்று காலை பரப்பன அக்ரஹாரா சிறையில், அதிரடி சோதனை நடத்தினர்.
கைதிகளின் அறைகளில் ஸ்மார்ட் போன்கள், செயல்பாட்டில் உள்ள சிம் கார்டுகள், சார்ஜர்கள், இயர் போன்கள், புகையிலை பொருட்கள் கண்டுடெடுக்கப்பட்டன.
மேலும், தண்டனை கைதி ஒருவர், மொபைல் போனில் பேசும் போதே, அதிகாரிகளிடம் சிக்கினார். அவர் வைத்திருந்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிறையில் கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவதை தடை செய்ய, 'ஹைடெக் ஜாமர்கள்' பொருத்தப்பட்டுள்ளன. அப்படி இருந்தும், கைதிகளுக்கு நெட் ஒர்க் கிடைப்பது, சிறையின் பாதுகாப்பு குறைபாட்டை உணர்த்துகிறது.
தடை செய்யப்பட்ட பொருட்கள், கைதிகளுக்கு கிடைப்பதில், சிறை ஊழியர்களின் கைவரிசை இருக்கலாம் என, அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த ஊழியர்களை கண்டுபிடிக்கும் நோக்கில், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
