/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரசவித்த குழந்தையை தவிக்க விட்டு சென்ற தாய்
/
பிரசவித்த குழந்தையை தவிக்க விட்டு சென்ற தாய்
ADDED : ஜூன் 14, 2025 11:08 PM
கோலார்: மாவட்ட மருத்துவமனையில் பிரசவத்துக்குப் பின், டீ குடித்து விட்டு வருவதாக, குழந்தையை விட்டுச் சென்ற தாய் திரும்பி வராததால் மருத்துவமனை நிர்வாகத்துக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
கோலார் மாவட்ட மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மாலை இளம்பெண், வயதான பெண்ணுடன் வந்திருந்தார். தன் பெயர் மவுனிசா, 19, என்றும்; கணவர் சீனிவாஸ் என்றும்; சிக்கபல்லாபூர் மாவட்டம் தன்னுாரை சேர்ந்தவர்கள் என்று கூறி, மொபைல் போன் எண்ணையும் கொடுத்தார்.
உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு வந்தபோது, தனக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக தெரிவித்தார். மனிதாபிமான அடிப்படையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, பெண் குழந்தை பிறந்தது.
நேற்று காலை இளம்பெண்ணும், வயதான பெண்ணும், 'டீ குடித்துவிட்டு வருகிறோம்' என்று கூறிவிட்டுச் சென்றனர்.
வார்டில் குழந்தை மட்டும் இருந்ததால், அங்கு பணியில் இருந்த செவிலியர், குழந்தையின் தாயையும், வயதான பெண்ணையும், மருத்துவமனை முழுதும் தேடினார். அவர்கள் எங்கும் இல்லததால், 1.5 கிலோ எடை மட்டுமே இருந்த குழந்தையை, மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் பராமரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, கோலார் நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
குழந்தைகள் நல டாக்டர் கமலாகர் கூறுகையில், ''தற்போது குழந்தை, மற்றொரு தாயின் பால் மூலம் பசியாற்றி வருகிறோம்,'' என்றார்.