/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாட்டு வண்டி நிலையத்தின் வணிக வளாகம் புல் மார்க்கெட் கடைகளை அகற்ற நகராட்சி அனுமதி
/
மாட்டு வண்டி நிலையத்தின் வணிக வளாகம் புல் மார்க்கெட் கடைகளை அகற்ற நகராட்சி அனுமதி
மாட்டு வண்டி நிலையத்தின் வணிக வளாகம் புல் மார்க்கெட் கடைகளை அகற்ற நகராட்சி அனுமதி
மாட்டு வண்டி நிலையத்தின் வணிக வளாகம் புல் மார்க்கெட் கடைகளை அகற்ற நகராட்சி அனுமதி
ADDED : அக் 25, 2025 05:18 AM
தங்கவயல்: ராபர்ட்சன் பேட்டை எம்.ஜி.மார்க்கெட் அருகே மாட்டு வண்டி நிலையம் இருந்த இடத்தில் முழுமை பெறாமல் இருந்து வரும் வணிக வளாகத்தையும், அதன் பக்கத்தில் உள்ள புல் மார்க்கெட் கடைகளையும் அகற்ற நகராட்சி கவுன்சிலில் நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து நடந்த விவாதம்:
நகராட்சி தலைவர் இந்திரா காந்தி: கவுன்சிலர்கள் அனைவரும் பேச வேண்டும். எனவே ஒவ்வொருவரும் இரண்டு நிமிடங்களில் பேசி கருத்து தெரிவிக்கவும்.
டி.ஜெயபால், காங்.,: நிறைய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும். இதை மறுக்கக் கூடாது. இதுவே இந்த கவுன்சிலின் கடைசி கூட்டமாக இருக்கலாம்.
தலைவர்: உங்களை பேச வேண்டாம் என்று தடுக்கவில்லை. மற்றவர்கள் பேச வாய்ப்பு தர வேண்டும்.
நிலைக்குழுத் தலைவர் வி.முனிசாமி: இது கடைசி கூட்டம் இல்லை. நீதிமன்றத்துக்கு சென்றுள்ளோம். அதிர்ஷ்டம் இருந்தால் தொடருவோம். அடுத்து கூட்டமும் நடக்கும்.
டி.ஜெயபால்: கவுன்சில் எப்போது முடிகிறது என்று நகராட்சிக்கு அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளதா?
ஆணையர் ஆஞ்சநேயலு: வரவில்லை.
டி.ஜெயபால்: அப்படியானால் இந்த கவுன்சிலுக்கு உயிர் இருப்பதாக தானே அர்த்தம்? அப்படி இருந்தும், இந்த கவுன்சில் கவனத்திற்கு வராமலேயே, புல் மார்க்கெட் கடைகளை ஏன் இடிக்க வேண்டும்; யார் அனுமதி கொடுத்தது?
வி.முனிசாமி: நகராட்சி நிலைக் குழுக்கூட்டத்தில் முடிவு எடுத்து இடிக்கப்பட்டது. புல் மார்க்கெட்டில் கடைகள் இயங்கவில்லை. வீடுகள், ஒர்க் ஷாப்புகள் உள்ளன. அங்கு வாகன நிறுத்துமிடம், மார்க்கெட்டிங் காம்ப்ளக்ஸ் கட்டப்படும்.
டி.ஜெயபால்: நிலைக் குழு முடிவெடுத்தாலும் கவுன்சிலின் அனுமதி ஏன் பெறவில்லை? அபிவிருத்தி பணிகளுக்கு எதிர்ப்பு இல்லை; நான்கு கவுன்சிலர்களை மட்டுமே வைத்துக் கொண்டு இடிக்கலாமா? அங்குள்ளவர்கள் நகராட்சியில் தலா 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி ரசீது வைத்துள்ளனர். அவர்களுக்கு அநியாயம் நடந்துள்ளது.
வி.முனிசாமி: அவர்களிடம் இருந்து எந்த பணமும் நகராட்சிக்கு வரவில்லை. அந்த ரசீது போலியானது.
டி.ஜெயபால்: நகராட்சி சீல், கையெழுத்து போலியானது என்றால், அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
வி.முனிசாமி: நகராட்சிக்கு சொந்தமானது புல் மார்க்கெட். மொத்த பரப்பளவு 2.25 ஏக்கர். அதை மீட்கப்படும். அங்கு வாகன நிறுத்துமிடம், கடைகள் கட்டப்படும். அதில் ஏற்கனவே கடைகள் வைத்திருந்தவர்களுக்கு கடைகள் வழங்க முன்னுரிமை வழங்கப்படும்.
ராபர்ட் சன் பேட்டை மாட்டு வண்டி நிலையம் இருந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு வந்தது. அது முடிக்கப்படாமல் உள்ளது. அதுவும் அகற்றப்படும். இங்கு இருந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் 21 பேருக்கு புதியதாக கட்டப்படும் வணிக கடைகளில் தலா ஒன்று வழங்கப்படும்.
டி.ஜெயபால்: மாட்டிறைச்சி கசாப்பு நிலையம் அகற்ற திடீர் நடவடிக்கை ஏன் எடுத்தீர்கள்; இதற்கு யார் ஒப்புதல் அளித்தது?
ஆணையர்: கசாப்பு நிலையத்தை அகற்ற நகராட்சி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
சமையல் காஸ், தையல் இயந்திரம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டினர்.

