/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மன தைரியத்தை அளிக்கும் நாகாஞ்சநேயர்
/
மன தைரியத்தை அளிக்கும் நாகாஞ்சநேயர்
ADDED : டிச 09, 2025 06:21 AM
வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சங்கடங்களை, துணிச்சலுடன் சந்திக்கும் தைரியத்தை கொடுக்கும் கடவுளாக போற்றப்படுபவர் ஆஞ்சநேயர். இதே காரணத்தால் ஆஞ்சநேயரை வணங்குகின்றனர். பக்தர்களை ஈர்க்கும் கோவில்களில், நாகாஞ்சநேயரும் ஒருவர்.
கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகாவின், பூதிகோட்டையின், காரமானஹள்ளி அருகில் நாகாஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. அற்புதமான இக்கோவில் ராமசந்திர ராயா ஏரிக்கரையில் உள்ளது. கடந்த சோழர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். இங்கு குடிகொண்டுள்ள ஆஞ்சநேயர், பல அற்புதங்களை செய்துள்ளார்.
மந்த்ராலயாவின், ராகவேந்திர சுவாமியின் வம்சத்தை சேர்ந்த ராமசந்திர ராவ் என்பவர், பண்டைய காலத்தில் இருந்து நாகாஞ்சநேயரை பூஜிக்கிறார்.
இதே காரணத்தால் ஏரிக்கு ராமசந்திர ராயா என, பெயர் ஏற்பட்டதாம். இக்கோவிலில் உள்ள விக்ரகம் மிகவும் அற்புதமான தோற்றத்தில் உள்ளது. ஆஞ்சநேயரின் முகம் வடக்கு நோக்கி உள்ளது.
இடது புறத்தில் சங்கு, வலது புறத்தில் சக்கரம், பின் புறம் வெங்கடேஷ்வர சுவாமியின் விக்ரகங்கள் உள்ளன. கோவிலில் நாக சன்னிதி இருப்பதால், நாகாஞ்சநேயர் என, அழைக்கப்படுகிறார். பல காலமாக கோவிலில் நாகப்பாம்பு ஒன்று வசிக்கிறது.
இங்கு வரும் பக்தர்கள், பாம்பை பார்த்துள்ளனர். யாருக்கும் எந்த தீங்கும் செய்ததில்லை.
இந்த பாம்பு எப்போதிருந்து கோவிலில் வசிக்கிறது என்பது, யாருக்கும் தெரியாது. கோவில் சிதிலமடைந்ததால் 2009ல் சீரமைக்கப்பட்டது. கோபுரம் கட்டப்பட்டது. கொடிக்கம்பம் உட்பட, பல பணிகள் நடந்தன.
கோவிலில் ஹனுமன் ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இங்குள்ள நாகாஞ்சநேயரை வழிபட்டால், மனதில் உள்ள பயம் நீங்கும். தைரியம் ஏற்படும் என்பது ஐதீகம்; தீவினைகள் நீங்கும். எதிரிகள் செய்வினை செய்திருந்தால் அது விலகி செல்லும்.
நாக தோஷங்கள் நிவர்த்தியாகும். எனவே கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்து, தரிசனம் செய்கின்றனர். வடை மாலை, வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுகின்றனர். செவ்வாய், சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வ,ருகின்றனர்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து, 68 கி.மீ., தொலைவில் கோலார் உள்ளது. கோலாரில் இருந்து 29 கி.மீ., தொலைவில், பங்கார்பேட்டை உள்ளது. இங்கிருந்து 13 கி.மீ., தொலைவில் பூதிகோட்டை உள்ளது. முக்கியமான நகரங்களில் இருந்து, பங்கார்பேட்டைக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தனியார் பஸ்கள், வாடகை வாகனங்களும் உள்ளன. பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் வெகு அருகில், கோலார் உள்ளது. பங்கார்பேட்டை பஸ், ரயில் நிலையங்களில் வந்திறங்கினால், வாடகை வாகனங்களில் நாகாஞ்சநேயர் கோவிலுக்கு செல்லலாம்.
தரிசன நேரம்: காலை 9:30 மணி முதல், மதியம் 1:30 மணி வரை, மாலை 5:30 மணி முதல், இரவு 8:00 மணி வரை.
- நமது நிருபர் -

