/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சர்ப்ப தோஷ பூஜைக்கு பிரசித்தி பெற்ற நஞ்சன்கூடு சுப்பிரமணியர் கோவில்
/
சர்ப்ப தோஷ பூஜைக்கு பிரசித்தி பெற்ற நஞ்சன்கூடு சுப்பிரமணியர் கோவில்
சர்ப்ப தோஷ பூஜைக்கு பிரசித்தி பெற்ற நஞ்சன்கூடு சுப்பிரமணியர் கோவில்
சர்ப்ப தோஷ பூஜைக்கு பிரசித்தி பெற்ற நஞ்சன்கூடு சுப்பிரமணியர் கோவில்
ADDED : செப் 30, 2025 05:27 AM

கர்நாடகாவின் பிரபலமான மாவட்டங்களில், மைசூரு மாவட்டமும் ஒன்றாகும். வரலாற்று சிறப்பு மிக்கது. இங்கு அழகான அரண்மனைகள், கோட்டைகள் மட்டுமல்ல, புராதன கோவில்களும் உள்ளன. பக்தர்களை சுண்டி இழுக்கின்றன. இவற்றில் சுப்பிரமணியர் கோவிலும் ஒன்றாகும்.
மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகாவின் கட்டவாடி கிராமத்தில் சுப்பிரமண்யர் கோவில் அமைந்துள்ளது. இது புராதன கோவில் இல்லை என்றாலும், புராதன கோவிலை போன்றே சக்தி வாய்ந்தது. கடந்த 11 ஆண்டுக்கு முன், சுப்பிரமணிய சுவாமிகள் என்பவர், இந்த இடத்தில் நிலம் வாங்கினார். இங்கு திடீரென பிரமாண்டமான புற்று தோன்றியது. இதை பார்த்து பரவசமடைந்த அவர், புற்றுக்கு தினமும் பூஜைகள் செய்து வந்தார்.
சுற்றுப்பகுதி கிராமங்களின் மக்கள், இங்கு வந்து புற்றை பூஜிக்க துவங்கினர். அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. கஷ்டங்கள் மறைந்தன; மகிழ்ச்சி பொங்கியது. நாளடைவில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது. புற்று வடிவில் சுப்பிரமணியர் அருள்பாலிப்பதாக மக்கள் நம்பினர். புற்று இருந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டது.
18 அடி உயர முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையை பெங்களூரை சேர்ந்த சிற்பக்கலைஞர் ஒருவர், மிகவும் நேர்த்தியாக செதுக்கியுள்ளார். ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாகும்.
சுப்பிரமணியருக்கு செவ்வாய் கிழமை உகந்த நாளாகும். எனவே வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில், பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர். அன்னதானம் வழங்கப்படுகிறது. சஷ்டி நாளன்று சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கின்றன. சர்ப்ப தோஷத்தால் அவதிப்படுவோர், இங்கு வந்து சர்ப்ப சாந்தி ஹோமம், காளிங்க சர்ப்ப தோஷ நிவர்த்தி ஹோமங்கள் நடத்தினால், தோஷங்களில் இருந்து விடுபடுவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சுப்பிரமணியர் கோவிலில் குழுவாகவும், தனி நபராகவும் சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜை செய்யலாம். இங்கு குடிகொண்டுள்ள சுப்பிரமணியரை பார்த்தால், குக்கே சுப்பிரமணியாவை தரிசித்த அனுபவம் கிடைக்கும். தன்னை நாடி வந்து சரண் அடையும் பக்தர்களை, சுப்பிரமணியர் எப்போதும் கைவிட்டது இல்லை.
வேண்டிய வரங்களை அள்ளி தருகிறார், கோவிலை பற்றி கேள்விப்பட்டவர்கள் இங்கு வந்து, சுப்பிரமணியரை தரிசித்து செல்கின்றனர்.
தோஷங்களால் அவதிப்படுவோரும், இங்கு வந்து தோஷ நிவர்த்தி பூஜை செய்கின்றனர். குழந்தைகளையும் அழைத்து வந்து, சுப்பிரமணியரை தரிசிக்க வைக்கின்றனர்.
- நமது நிருபர் -