/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மூதாட்டி கழுத்தறுத்து கொலை: பக்கத்து வீட்டுக்காரர்கள் கைது
/
மூதாட்டி கழுத்தறுத்து கொலை: பக்கத்து வீட்டுக்காரர்கள் கைது
மூதாட்டி கழுத்தறுத்து கொலை: பக்கத்து வீட்டுக்காரர்கள் கைது
மூதாட்டி கழுத்தறுத்து கொலை: பக்கத்து வீட்டுக்காரர்கள் கைது
ADDED : டிச 03, 2025 06:37 AM

ஷிவமொக்கா: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தங்க நகைகளுடன் தப்பிய அண்டை வீட்டை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., மிதுன் குமார் கூறியதாவது:
ஷிவமொக்கா மாவட்டம் கும்சியில் வசித்து வந்தவர் பசம்மா, 65. விதவை. கடந்த அக்., 3ம் தேதி பசம்மா தன் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இக்கொலைக்கு பசம்மாவின் மகன் ரமேஷ் காரணம் என, பசம்மாவின் சகோதரரும், அவரின் மகளை திருமணம் செய்தவருமான ஈஸ்வரப்பா, கும்சி போலீசில் புகார் அளித்தார். ரமேஷிடம் விசாரித்த போது, அவர் கொலை செய்யவில்லை என தெரியவந்தது.
கொலை நடந்த வீட்டை ஆய்வு செய்த போது, முன்பக்க கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. பின்பக்க கதவு திறந்திருந்தது. பசம்மா அணிந்திருந்த நகைகள் மட்டுமே காணாமல் போயிருந்தன. வீட்டில் வேறு எந்த பொருட்களும் திருடப்படவில்லை.
போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின், பக்கத்து வீட்டை சேர்ந்த அமன் சிங், 21, அவரது நண்பர் விகாஸ், 22, ஆகியோர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
சம்பவத்தன்று, தங்கள் வீட்டு சமையல் காஸ் சிலிண்டரில் பிரச்னை இருப்பதாக கூறி, பசம்மா வீட்டுக்கு அமன்சிங்கும், விகாஸும் சென்று உள்ளனர்.
ஐந்து நிமிடம் பேசிய இருவருக்கும், சாப்பிடுவதற்கு, 'வெஜிடபிள் பிரியாணி' வழங்கி உள்ளார் பசம்மா. சாப்பிடும் போது, அமன் சிங் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.
தண்ணீர் எடுக்க பசம்மா சமையல் அறைக்கு சென்ற போது, பின்னால் சென்ற இருவரும், அவரின் கழுத்தை அறுத்துள்ளனர். கீழே விழுந்த அவரை, பல முறை கத்தியாலும் குத்திக் கொன்றுள்ளனர். பின், பசம்மா அணிந்திருந்த தங்க நகைகள், கம்மல் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளனர். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

