/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வருக்கு ரூ.70 லட்சத்தில் புதிய மின்சார சொகுசு கார்
/
முதல்வருக்கு ரூ.70 லட்சத்தில் புதிய மின்சார சொகுசு கார்
முதல்வருக்கு ரூ.70 லட்சத்தில் புதிய மின்சார சொகுசு கார்
முதல்வருக்கு ரூ.70 லட்சத்தில் புதிய மின்சார சொகுசு கார்
ADDED : அக் 07, 2025 04:51 AM

பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவுக்கு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மின்சாரத்தால் இயங்கும் சொகுசு காரை பரிசளிக்க, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்களின் பயன்பாட்டுக்காக, 68 மின்சார வாகனங்களை, பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் முதல்வர் சித்தராமையா நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே பேசியதாவது:
நாட்டில், 15 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களை பயன்படுத்த கூடாது. இவற்றை, 'ஸ்க்ராப்' செய்ய வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில், வாகனங்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் தரமற்ற பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள், இ - கழிவுகளை அழிக்கும் மையங்களை கண்காணிக்க முடியவில்லை.
தரமற்ற பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் விற்பனை கடைகளை ஆய்வு செய்யவும், நீர் நிலைகளின் சூழ்நிலையை நேரில் தெரிந்து கொள்ளவும் கஷ்டமாக இருந்தது.
எனவே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை வழங்கும்படி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்தது. இதை ஏற்றுக்கொண்டு, 68 வாகனங்கள் வழங்கப்பட்டன.
புதிய வாகனங்களை பயன்படுத்தி, உள்ளாட்சி ஒத்துழைப்புடன், சுற்றுச்சூழலை பாதுகாக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நரேந்திர சாமி கூறியதாவது:
பெங்களூரில் முதல்வர் சித்தராமையாவின் பயன்பாட்டுக்கு, புதிய மாடல் மின்சார சொகுசு காரை பரிசளிக்க, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த காரின் விலை 60 லட்சம் முதல், 70 லட்சம் ரூபாய்.
இக்கார் பெங்களூரில் பயணம் செய்ய, முதல்வருக்கு உதவியாக இருக்கும். மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதே, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நோக்கம்.
முதல்வருக்கு மட்டுமின்றி, வனம், சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரேவுக்கும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மின்சார கார் பரிசளிக்கப்படும். அரசின் அனைத்து துறைகளிலும், டீசல் வாகனங்களை, படிப்படியாக மின்சார வாகனமாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.