ADDED : ஜூலை 07, 2026 11:13 PM
* பெங்களூரு அரண்மனை மைதானத்தில், கர்நாடக காங்கிரஸ் அனைத்து உறுப்பினர்கள் கூட்டம், நேற்று நடந்தது. மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், 'ராமர் கோவில் நன்கொடை முறைகேடு வழக்கை, உத்தர பிரதேச அரசு, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும்; கர்நாடகாவில் வறட்சி மேலாண்மை பணிக்காக, மத்திய அரசு 10,000 கோடி ரூபாய் சிறப்பு மானியம் வழங்க வேண்டும்' என்பது உட்பட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
*பெங்களூரு பேட்ராயனபுரா போலீசார், அரிவாள், வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை விற்க முயன்றதாக, அக்பர் ஷெரீப், 45, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவரிடம் இருந்து, 22 ஆயுதங்கள், 22 மொபைல் போன்கள், 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
* பெங்களூரில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை நிர்வாக இயக்குனராக பணி செய்பவர் ஜெகதீஷ். இவர், 2020ல் பெங்களூரு நகர மாவட்ட சிறப்பு துணை கமிஷனராக பணியாற்றிய போது, எலஹங்கா அருகே உனசமாரனஹள்ளியில் 16 ஏக்கர் அரசு நிலத்தை, ஒன்பது தனி நபர்களுக்கு விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கிடைத்த தகவலின்படி, ஜெகதீஷின் வீடு, அலுவலங்களில், நேற்று லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி, ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
* பல்லாரி டவுன் குக்கரஹட்டியில் வசிப்பவர் தேஜா, 29. இவரது மனைவி நாகலட்சுமி, 24. குடும்ப தகராறில் இருவரும் பிரிந்தனர். நேற்று மாலை நாகலட்சுமியை, அவரது தந்தை சீனிவாஸ், 48, கணவர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்பட்ட தகராறில், நாகலட்சுமி, சீனிவாஸ் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர். குருசங்கர், 50, மற்றும் ஒருவர் போலீசில் சரண் அடைந்தனர்.
* சிக்கபல்லாபூரின் பைலகுர்கி கிராமத்தில் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, லாரியின் பின்பக்கம், ஆந்திரா அரசு பஸ் மோதியது. இதில் பஸ் டிரைவர் லட்சுமண், 50, பெங்களூரின் கல்யாண்நகரின் உமாகாந்த் ராவ், 88, இறந்தனர்.
* கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., பணிகளின் போது நடக்கும் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி, இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரிடம், மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, குமாரசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மனு அளித்தனர்.
