தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செய்திகள் சில வரிகளில் 

 செய்திகள் சில வரிகளில் 

 செய்திகள் சில வரிகளில் 


ADDED : செப் 12, 2026 11:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 11:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

பெங்களூரில் குழந்தை தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் படி, நேற்று காலை 10:00 மணி முதல், மதியம் 12:00 மணி வரை நகரில் உள்ள வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உட்பட 5,897 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

இதில், 503 குழந்தை தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும், குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்திய, 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களின் பின்னணி குறித்து விசாரிக்கப்படுகிறது.

போன் திருட்டு

பெங்களூரு நாராயணப்பா கார்டனில் வசிப்பவர் திரிதீப் தேபநாத், 31. இவர் நாராயணப்பா கார்டனிலிருந்து மாரத்தஹள்ளிக்கு பைக் டாக்சியில் கடந்த 6ம் தேதி அதிகாலை சென்றார். பைக் டாக்சி ஓட்டுநரான அஷுதோஷ் குமார், 28, தனது மொபைல் போனில் 'சார்ஜ்' இல்லை எனக்கூறி திரிதீப்பினுடைய ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை வாங்கினார்.

பின், மடிவாளாவில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஸ்கூட்டரின் டயருக்கு காற்று அடிக்க வேண்டும் எனக்கூறி வண்டியை நிறுத்தினார். டயருக்கு காற்று அடிக்க வேண்டுமென்பதால், திரிதீப் வண்டிலியிருந்து கீழே இறங்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் அஷுதோஷ் போனுடன், வண்டியை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றார். மடிவாளா போலீசார் விசாரிக்கின்றனர்.

கமிஷனர் ஆய்வு

பெங்களூரு எடியூர் பயோகாஸ் ஆலையை நேற்று ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் ஆய்வு செய்தார். அப்போது, பெங்களூரு மேற்கு மாநகராட்சி கமிஷனர் ராஜேந்திரா, பெங்., மாநகராட்சி முன்னாள் ஆளுங்கட்சி தலைவர் என்.ஆர்.ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த பயோகாஸ் ஆலையிலிருந்து, 3,000 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள 16 பூங்காக்கள் மற்றும் நடைபாதைகளில் உள்ள மின்விளக்குகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், மாதந்தோறும் 1.10 கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதை நினைத்து கமிஷனர் மஹேஸ்வர ராவ் பெருமிதம் அடைந்தார்.

பா.ஜ., பாதயாத்திரை

'வந்தே மாதரம்' பாடலில் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே பாடப்படும் என்ற காங்., அரசின் முடிவுக்கு, பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த முடிவை திரும்ப பெறக்கோரி, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் பாதயாத்திரை நடத்த மாநில பா.ஜ., முடிவு செய்து உள்ளது. வரும், 15ம் தேதி முதல், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் ஒரு கி.மீ., துாரம் வரை பாதயாத்திரை நடத்தப்படும். பா.ஜ.,வினர் கலெக்டர், தாசில்தாரிடம் மனு அளித்து தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சாலமன் பாப்பையா

நினைவஞ்சலி

தமிழறிஞர் சாலமன் பாப்பையா நினைவஞ்சலி நிகழ்ச்சி, தங்கவயல் தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடந்தது. தங்கவயல் தமிழ்ச் சங்க புரவலர் அனந்தகிருஷ்ணன் தலைமையில், தமிழ்ச் சங்கத் தலைவர் சு.கலையரசன் முன்னிலையில் நடந்தது.

தங்கவயலில் தமிழிலக்கியத்தில் முதிர்ச்சி பெற்ற அறிஞர் ஒருவருக்கு தங்கவயல் தமிழ்ச் சங்கத்தில் ஆண்டு தோறும் திருவள்ளுவர் தினத்தில், சாலமன் பாப்பையா நினைவு விருது வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

எழுத்தாளர்கள் வ.பெ.கணேசன், பரிமளசேகர், சுபானந்ததாசர், வக்கீல்கள் சங்க செயலர் ஆர்.ஜோதிபாசு, ஸ்ரீதரன், ராபர்ட்சன்பேட்டை எம்.ஜி.மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் தேவேந்திரன், ஆர்.பிரபுராம் ஆகியோர் பேசினர்.

தமிழ்ச் சங்க செயல் தலைவர் கமல் முனிசாமி, துணைத்தலைவர்கள் தீபம் சுப்ரமணியம், திருமுருகன், கருணாகரன், இணைச்செயலர் அப்பு ஜெயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

மழை வேண்டி பூஜை

தங்கவயல் மங்கசந்திரா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாத்தேன ஹள்ளி கிராமத்தில் மழை வேண்டி, ஆர்.கே.பவுண்டேஷன் சார்பில் பூஜை நடந்தது. தலைவர் மோகன் கிருஷ்ணா தலைமை வகித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us