போலி மருந்து வாங்கி விற்பனை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்
போலி மருந்து வாங்கி விற்பனை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்
ADDED : ஆக 25, 2026 01:10 AM
பெங்களூரு: போலி மருந்து தயாரிப்பு விவகாரத்தில், சந்தேக வட்டத்திற்குள் உள்ள மருந்து கடைகளுக்கு, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கர்நாடகாவில் பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி மருந்து தயாரித்து விற்பனை செய்து வந்த, 'நெட்ஒர்க்' கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரிக்க, ஐ.பி.எஸ்., அதிகாரி வம்சி கிருஷ்ணா தலைமையில் எஸ்.ஐ.டி., அமைக்கப்பட்டு உள்ளது.
இக்குழு, ஆரம்பத்தில் போலி மருந்து நெட்ஒர்க்கின் முக்கிய குற்றவாளிகள், வினியோகஸ்தர்கள் மீது கவனம் செலுத்தியது. இருப்பினும், விசாரணையின் போது மருந்துகளை வாங்கி, வாடிக்கையாளர்களுக்கு மருந்து கடைகள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலி மருந்துகளை வாங்கி, விற்பதாக சந்தேகப்படும் பெங்களூரின் சாம்ராஜ்பேட் உட்பட ஐந்தாறு மருந்து கடை உரிமையாளர்களுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
எஸ்.ஐ.டி., குழுவினர், சில நாட்களுக்கு முன் பெங்களூரு தெற்கு மாவட்டம் ராம்நகரின் பிடதி, ஹெஜ்ஜாலாவில் சோதனை நடத்தி, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மருந்துகளை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
