மேம்பாலங்களின் கீழே புட் கோர்ட் அமைக்க அதிகாரிகள் திட்டம்
மேம்பாலங்களின் கீழே புட் கோர்ட் அமைக்க அதிகாரிகள் திட்டம்
ADDED : ஜூலை 29, 2026 11:43 PM
பெங்களூரு: மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில், 'ஹைடெக் புட் கோர்ட்' அமைக்க, 'பி ஸ்மைல்' எனும் பெங்களூரு இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் திட்டம் வகுத்துள்ளது.
இது குறித்து, பி ஸ்மைல் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரின் மக்கள் நெரிசல் மிக அதிகமாக உள்ள நெடுஞ்சாலையான, சென்ட்ரல் சில்க் போர்டு ஜங்ஷனில் இருந்து, கே.ஆர்.புரம் வரையிலான வெளிவட்ட சாலையை மேம்படுத்த, பி ஸ்மைல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 450 கோடி ரூபாய் செலவில், 17.1 கி.மீ., வரை ஆறு முக்கிய ஜங்ஷன்கள், வெளிநாடுகளை இருப்பதை போல, நவீனப்படுத்தப்படும்.
இவற்றில், 10 ஸ்மார்ட் பஸ் ஸ்டாப்புகள் அமைக்கப்படும். இப்பாதையில் உள்ள பஸ் நிறுத்தங்கள், ஸ்மார்ட் ஷெல்டர்களாக மாற்றப்படும். பஸ்களின் வருகையை அறிவிக்க டிஜிட்டல் திரைகள், கண்காணிப்பு கேமராக்கள், மொபைல் போன், லேப் டாப் சார்ஜிங் பாயின்டுகள் வசதி செய்யப்படும். அகலமான நடைபாதை, இட வசதி உள்ள சைக்கிள் பாதைகள் அமைக்கப்படும்.
சில நாட்களுக்கு முன், பெங்களூரு நகர மேம்பாட்டு துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா, ஆலோசனை நடத்திய போது, மேம்பாலங்களின் கீழே உள்ள காலியிடங்களை, பொது நோக்கங்களுக்கு பயன்படுத்தும்படி அறிவுறுத்தினார்.
டெலிவரி பாய்ஸ்கள், சுற்றுலா பயணியருக்கு நிழலுடன் கூடிய இருக்கைகள் பொருத்தப்படும். வை பை உட்பட, பல வசதிகள் செய்யப்படும். சோலார் மின் சக்தி அடிப்படையிலான சார்ஜிங், பொழுதுபோக்கு இடங்கள், ஹைடெக் புட் கோர்ட்கள், சிறிய மார்க்கெட்டுகள் அமைக்கப்படும் .
இவ்வாறு அவர்கள் கூறினர்.
