தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சதுர்த்தி நாளில் ஹிட்டியங்கடி விநாயகரை தரிசிக்கலாமே!

 சதுர்த்தி நாளில் ஹிட்டியங்கடி விநாயகரை தரிசிக்கலாமே!

 சதுர்த்தி நாளில் ஹிட்டியங்கடி விநாயகரை தரிசிக்கலாமே!


ADDED : செப் 08, 2026 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 03:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

உடுப்பி என்றவுடன், நமக்கு சட்டென நினைவுக்கு வருவது ஸ்ரீ கிருஷ்ணர் மடமும், கோவிலும்தான். இம்மாவட்டத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற விநாயகர் கோவிலும் உள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு தரிசனம் செய்ய வேண்டிய கோவிலில், இதுவும் ஒன்றாகும்.

உடுப்பி மாவட்டம், குந்தாபுரா தாலுகாவில், ஹட்டியங்கடி கிராமத்தில் சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இது ஏழாவது அல்லது எட்டாவது நுாற்றாண்டில் கட்டப்பட்ட புராதன கோவிலாகும். வராஹி ஆற்றங்கரையில் அமைதியான சூழ்நிலையில் அமர்ந்துள்ள விநாயகர், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

துளு நாட்டை ஆட்சி செய்த ஆலுாப மன்னரின் தலைநகராக இருந்தது பட்டிநகர். காலப்போக்கில் இந்த பெயர் ஹட்டியங்கடியானது. அவரது காலத்தில் கோவில் கட்டி, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஹொய்சாளர்கள் மற்றும் ஹொனகம்பலா மன்னர்கள் ஆட்சியில், இங்கு கவியரங்கம் நடந்ததாம். 16ம் நுாற்றாண்டில், தலைமை அர்ச்சகராக இருந்த ராமபட்டர், அடுத்த 300 ஆண்டுகளில் ஹட்டியங்கடி, உலக பிரசித்தி பெறும் என, ஆரூடம் கணித்தார். அந்த கணிப்பு தற்போது உண்மையாகியுள்ளது.

புராதன ஹட்டியங்கடி சித்தி விநாயகர் கோவில் 1980 மற்றும் 1997ம் ஆண்டுகளில், கிரானைட் கற்கள் பொருத்தி சீரமைக்கப்பட்டது. 1980ல் புதுப்பித்த போது, அன்றைய கர்நாடக முதல்வர் தேவராஜ் அர்ஸ், இந்த கோவிலை திறந்து வைத்தார். இந்தியாவிலேயே ஜடாமுடியுடன் தென்படும் ஒரே விநாயகர் சிலை இதுதான். இந்த விக்ரகத்தில் ஜடாமுடி இருப்பதை காணலாம். சாளகிராம கல்லால் விநாயகர் சிலை செதுக்கப்பட்டதாகும். 2.5 அடி உயரம் கொண்டது. பால விநாயகருக்கு இரண்டு கைகள் உள்ளன. இடது கையில் கொழுக்கட்டைகள் உள்ள பாத்திரத்தை பிடித்திருக்கிறார்.

ஹட்டியங்கடி விநாயகர் சிலை, நாளுக்கு நாள் வளர்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். விநாயகருக்கு மஹா மங்களாரத்தி நடக்கும் போது, விநாயகரை அலங்கரிக்கப்பட்ட பூ கீழே விழுந்தால் பக்தர்கள் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேற, 1,008 தேங்காய்கள் உடைத்து யாகம் நடத்துகின்றனர். லட்ச புஷ்பார்ச்சனை, குங்கும அர்ச்சனை செய்கின்றனர். மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும்.

சித்தி விநாயகரை தரிசனம் செய்து வேண்டினால், கஷ்டங்கள் விலகும்; வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும். சிறார்கள் நன்கு படிப்பர். இங்கு புனித நீராட குளம், கோவிலை சுற்றிலும் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இது, பக்தர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும். விநாயகர் சதுர்த்தி நாளில் தரிசிக்க வேண்டிய முக்கியமான கோவில்களில், ஹட்டியங்கடி சித்தி விநாயகர் கோவிலும் ஒன்றாகும்.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து, 399 கி.மீ., மங்களூரில் இருந்து, 56 கி.மீ., மைசூரில் இருந்து 328 கி.மீ., சிக்கமகளூரில் இருந்து 164 கி.மீ., தொலைவில் உடுப்பி உள்ளது. உடுப்பியில் இருந்து 44 கி.மீ., தொலைவில் ஹட்டியங்கடி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

மாநிலத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும், உடுப்பிக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. விமானத்தில் வர விரும்பினால், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து வாடகை வாகனத்தில், கோவிலுக்கு செல்லலாம்.

தரிசன நேரம்: காலை 6:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை.

தொடர்பு எண்: 99027 75052, 94482 97048

அருகில் உள்ள கோவில்கள்: கோபால கிருஷ்ணர் கோவில், லோகநாதேஸ்வரர் கோவில், மாரளா தேவி கோவில், சங்கர நாராயணர் கோவில், சிவ முனீஸ்வரா கோவில், ஏகாந்தேஸ்வரர் கோவில், சந்திரநாத பசதி கோவில்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us