/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
ஒருபுறம் குப்பைக்கு தீர்வு... மறுபுறம் வேலைவாய்ப்பு!
/
ஒருபுறம் குப்பைக்கு தீர்வு... மறுபுறம் வேலைவாய்ப்பு!
ஒருபுறம் குப்பைக்கு தீர்வு... மறுபுறம் வேலைவாய்ப்பு!
ஒருபுறம் குப்பைக்கு தீர்வு... மறுபுறம் வேலைவாய்ப்பு!
ADDED : அக் 11, 2025 10:57 PM

ஹூப்பள்ளி நகரின் சாலைகளை பெருக்கி, சுத்தம் செய்ய தேவையான துடைப்பங்களை ஹூப்பள்ளி - தார்வாட் மாநகராட்சியே தயாரிக்கிறது.
ஹூப்பள்ளி - தார்வாட் இரட்டை நகரங்களின் பல்வேறு பகுதிகளில் தென்னை மரங்கள் பெருமளவில் வளர்ந்துள்ளன. தென்னங்கீற்றுகள் ஆங்காங்கே விழுந்து, குப்பையாக கிடக்கின்றன. இவற்றை வேறு இடத்துக்கு கொண்டு சென்று, இயற்கை உரம் தயாரிக்க அதிக நேரமாகிறது.
இதை கருத்தில் கொண்டு, ஹூப்பள்ளி - தார்வாட் மாநகராட்சி, புதிய திட்டம் வகுத்தது. சாலைகளில் விழும் தென்னங்கீற்றுகளை சேகரித்து, துடைப்பங்கள் தயாரிக்க திட்டம் வகுத்துள்ளது.
ஹூப்பள்ளி நகரை தினமும் சுத்தம் செய்ய, துாய்மைப் பணியாளர்கள் பயன்படுத்தும் துடைப்பங்களை, ஹூப்பள்ளி - தார்வாட் மாநகராட்சியே வினியோகிக்கும்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் தார்வாடின், 17வது வார்டு மஞ்சுநாத நகரில் துடைப்பம் தயாரிக்கும் பணி நடக்கிறது. துடைப்பங்கள் தயாரிப்பதற்காகவே, சுற்றுச்சூழல் ஆர்வலர் சஞ்சு குல்கர்னி, தன் நிலத்தில் உள்ள ஷெட்டை தற்காலிகமாக கொடுத்துள்ளார். துாய்மைப் பணியாளர்கள் கலாவதி கட்டிமனி, விஜயலட்சுமி சாகன்னனவர் உள்ளிட்டோர் தங்களின் ஓய்வு நேரத்தில், தென்னந்துடைப்பங்கள் தயாரிக்கின்றனர்.
துடைப்பம் தயாரித்தது போக, மிச்சமாகும் கழிவுகளை சஞ்சு குல்கர்னி அமைத்துள்ள உரம் தயாரிப்பு மையத்துக்கு வழங்குகின்றனர். ஹூப்பள்ளி - தார்வாட் மாநகராட்சியின் திட்டத்தால், துடைப்பங்கள் வாங்க செலவிடும் தொகை மிச்சமாகும். நகரை சுத்தம் செய்ய துடைப்பங்களும் கிடைக்கும்.
இதுகுறித்து, ஹூப்பள்ளி - தார்வாட் அதிகாரிகள் கூறியதாவது:
மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், அதிக அளவில் தென்னங்கீற்றுகள் கிடைக்கின்றன. இவற்றை கொண்டு செல்லவும், உரம் தயாரிக்கும் மையங்களில் சேகரித்து வைப்பதும் கஷ்டமாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் நோக்கில், தென்னங்கீற்றுகளை பயன்படுத்தி, துடைப்பங்கள் தயாரிக்கிறோம்.
தங்களின் வீடுகள், தோட்டங்களில் இருந்து விழும் தென்னங்கீற்றுகளை பொதுமக்கள் சாலையில் வீசுகின்றனர். இவற்றை குப்பை வாகனங்கள் அப்புறப்படுத்துவதில்லை.
தென்னங்கீற்றுகள் இருப்பதை பார்த்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பர். அவர்களின் உத்தரவுபடி, தென்னங்கீற்றுகளை சேகரித்து, மாநகராட்சி வாகனத்தில் ஊழியர்கள் கொண்டு வருவர்.
விலை நிர்ணயம் தென்னங்கீற்றுகளை வைத்து, துடைப்பங்கள் தயாரிக்கும் பணிக்கு, சுய உதவி சங்கங்களின் உறுப்பினர்களை நியமிக்க ஆலோசிக்கிறோம். இது பற்றி சுய உதவி சங்கங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.
அவர்களிடம் தென்னங்கீற்றுகளை கொடுத்து, துடைப்பம் தயாரிக்கும்படி செய்வோம். அதற்கான பணம் கொடுத்து, மாநகராட்சி துடைப்பங்களை வாங்கும்; விலையை மாநகராட்சியே நிர்ணயிக்கும்.
ஹூப்பள்ளி - தார்வாட் மாநகராட்சியில், துாய்மைப் பணி செய்யும் 2,000 ஊழியர்கள் உள்ளனர். இதில் பெண் தொழிலாளர்கள் மட்டுமே, துடைப்பம் பயன்படுத்துகின்றனர். ஆண்களில் சிலர் பயன்படுத்துகின்றனர்.
ஆண்டுதோறும் மாநகராட்சி பயன்பாட்டுக்கு 12,000 முதல் 15,000 துடைப்பங்கள் தேவைப்படுகின்றன. வெளி மார்க்கெட்டில், ஒரு துடைப்பத்தின் விலை 80 முதல் 90 ரூபாய் வரை உள்ளது. துடைப்பம் வாங்கவே 12 முதல் 15 லட்சம் ரூபாய் செலவாகிறது.
எனவே தென்னங்கீற்றுகளை சுய உதவி சங்கங்களிடம் கொடுத்து, துடைப்பம் தயாரிக்க வைப்பதால், மாநகராட்சிக்கு செலவு குறையும்.
இத்திட்டத்தால் சுய உதவி சங்கங்களின் உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்; குப்பை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் - .