காங்கிரசை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு சக்தியில்லை: முதல்வர் சிவகுமார் பாய்ச்சல்
காங்கிரசை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு சக்தியில்லை: முதல்வர் சிவகுமார் பாய்ச்சல்
ADDED : ஆக 23, 2026 11:09 PM

பெங்களூரு: ''எதிர்க்கட்சிகளுக்கு சட்டசபையில், காங்கிரசை எதிர்க்கொள்ளும் சக்தி இல்லை. இதனால் கூட்டத்தொடர் நடக்கவிடாமல் இடையூறு செய்கின்றன,'' என, முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இந்த மண்ணில் சட்டம் உள்ளது. அந்த சட்டத்துக்கு உட்பட்டு, போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினர் குண்டர்கள் போன்று நடந்து கொள்கின்றனர்.
ஒரு நோட்டீசும் கொடுக்காமல், போராட்டம் நடத்தி, சட்டசபை கூட்டத்தொடர் நேரத்தை வீணாக்குகின்றனர்.
எதிர்க்கட்சிகள் தர்ணா நடத்துவது தவறு அல்ல. ஆனால், முறைப்படி நோட்டீஸ் கொடுத்து, சம்பந்தப்பட்ட விஷயத்தை பற்றி விவாதிக்கட்டும். அமைச்சர் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்பது குறித்து, ஆலோசிக்கவும், எதிர்க்கட்சிகளுக்கு பொறுமை இல்லை.
எதிர்க்கட்சிகளுக்கு சட்டசபையில், காங்கிரசை எதிர்க்கொள்ளும் சக்தி இல்லை. இதனால், கூட்டத்தொடர் நடக்கவிடாமல் இடையூறு செய்கின்றன.
இதுவரை மாநிலத்தின், மத்தியில் எத்தனை அமைச்சர்கள் மீது வழக்குகள் உள்ளன என்பதை, எதிர்க்கட்சியினரே கூறட்டும்.
நாட்டின் எந்தெந்த அமைச்சர்கள், எந்தெந்த முதல்வர்கள் மீது, எத்தனை வழக்குகள் உள்ளன என்பது குறித்து, ஊடகத்தினர் ஆவணங்களுடன் கேள்வி எழுப்ப வேண்டும்.
காங்கிரசில், 16 எஸ்.சி., பிரிவு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஆனால், எதிர்க்கட்சிகளில், இந்த பிரிவின் தலைவர்கள் வளரவில்லை. இந்த அதிருப்தியால், இது போல போராட்டம் நடத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
