ADDED : செப் 02, 2026 12:57 AM

சிக்கோடி: போதையில் 'அட்ராசிட்டி' செய்தவரை, 50 மரக்கன்றுகள் நடுமாறு, ஜே.எம்.எப்.சி., நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெலகாவி மாவடம் யக்சம்பா பகுதியை சேர்ந்தவர் அனில் நிங்கப்பா பூஜாரி, 38. இவர் சில வாரங்களுக்கு முன், தனது வீட்டருகே மதுபோதையில் கத்திக்கொண்டிருந்தார். பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக, சடலகா போலீசார், அவரை கைது செய்து ஜே.எம்.எப்.சி., எனும் 'ஜூடிசியல் மாஜிஸ்திரேட்' முதல் நிலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
ஜே. எம்.எப்.சி., நீதிமன்றத்தில் அனில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அனிலுக்கு அபராதம், சிறைத்தண்டனை எதுவும் வழங்காமல், 50 மரக்கன்றுகளை நடுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, அவர் நீதிமன்ற வளாகத்தில், 25 மரக்கன்றுகளையும், சடலகா போலீஸ் நிலைய வளாகத்தில் 25 மரக்கன்றுகளையும் நட்டார்.
இந்த நுாதன தீர்ப்பை பலரும் பாராட்டியுள்ளனர்.
