தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் சாதித்த பத்மபிரியா
தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் சாதித்த பத்மபிரியா
ADDED : அக் 16, 2025 11:21 PM

மைசூரு மாவட்ட வனத்துறையில் அதிகாரிகளாக பணிபுரியும் டாக்டர் பி.ரமேஷ் குமார் - மாலதி பிரியா தம்பதி மகள் பத்மபிரியா,13. இவர், மைசூரு நகரில் உள்ள எக்செல் பப்ளிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், தனது சிறுவயதில் இருந்து டென்னிஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இவருக்கு டென்னிஸ் விளையாடுவதில் அதீத இஷ்டம். இதனால், கடும் பயிற்சிகளை கூட எளிதில் செய்யும் திறன் உடையவராக உள்ளார். மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டிகளில் பல ஆண்டுகளாக பங்கேற்று வருகிறார். ரகுவீர் பொன்னுசாமி, பவன் ஆகியோரிடம் டென்னிஸ் பயிற்சி பெற்று வருகிறார். சாகர் என்பவரிடம், உடற்பயிற்சிக்கான பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
பத்மபிரியா பார்ப்பதற்கு அப்பாவி போல இருந்தாலும், டென்னிஸ் விளையாடும் போது, எதிராளி 'அடடா' என கூறும் அளவிற்கு தீயாக செயல்படுவார். தனது முழு சக்தியை கொண்டு பந்தை அடிக்கும் போது, பந்து எரி நட்சத்திரம் போல வேகத்தில் செல்லும். மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை பெற்றார். இதன் காரணமாக, புதுடில்லியில் சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான டென்னிசில் 'பெனெஸ்டா ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - 2025' போட்டியில் கர்நாடகா சார்பில் பங்கேற்றார். இதில், 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் பரிசும், ஒற்றையர் பிரிவில் இரண்டாம் பரிசும் பெற்றார். இதன் மூலம் நம் மாநிலத்துக்கு தேசிய அளவில் பெருமையை சேர்த்து உள்ளார்.
இதே சாம்பியன்ஷிப் தொடரில் 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான டென்னிசில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றார். இந்த போட்டியில் பதக்கம் எதுவும் பெறவில்லை என்றாலும், தனது திறனை சிறப்பாக வெளிப்படுத்தினார்.
பலரது கவனத்தையும் ஈர்த்தார். இதன் மூலம் தேசிய அளவில் 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் டென்னிஸ் பிரிவில் முன்னிலை வகிக்கிறார். தேசிய அளவின் பத்மபிரியாவின் பெயர் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், ''இன்னமும் பல பதக்கங்களை வாங்க காத்து கொண்டிருக்கிறேன். தீவிர பயிற்சியில் இறங்க உள்ளேன். டென்னிசில் பல சாதனைகள், பதக்கங்களை பெறுவதே எனது லட்சியம்,'' என்றார்
- நமது நிருபர் - .