இளைஞரால் பாழான குடும்ப கவுரவம் மகளுடன் பெற்றோர் தற்கொலை
இளைஞரால் பாழான குடும்ப கவுரவம் மகளுடன் பெற்றோர் தற்கொலை
ADDED : ஜூன் 22, 2026 11:47 PM

மைசூரு: மகளின் முன்னாள் காதலரின் செயலால், தர்ம சங்கடத்துக்கு ஆளான பெற்றோர், தங்கள் மகளுடன் தற்கொலை செய்து கொண்டனர்.
மைசூரு மாவட்டம், டி.நரசிபுரா தாலுகாவின் கெம்பைய்யன ஹுன்டி கிராமத்தில் வசித்தவர் சிவண்ணா, 54. இவரது மனைவி நாகரத்னா, 44. தம்பதியின் மகள் ரக்ஷிதா, 21. இதே கிராமத்தில் வசிக்கும் உல்லாஸ் கவுடா, 27, சிவண்ணாவிடம் டிராக்டர் ஓட்டுநராக பணியாற்றினார்.
உல்லாஸ் கவுடாவுக்கும், ரக்ஷிதாவுக்கும் காதல் இருந்தது. இருவரும் போனில் பேசியுள்ளனர். ஒருவருக்கு ஒருவர் மெசேஜ் அனுப்பி கொண்டனர். என்ன காரணத்தாலோ, இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சிவண்ணா, வேறு இளைஞருடன் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். மூன்று மாதங்களுக்கு முன், நிச்சயதார்த்தம் நடந்தது.
நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், உல்லாஸ் கவுடா பங்கேற்று, ஓடியாடி வேலை செய்தார். நாளை மறுநாள் திருமணம் நடக்கவிருந்தது. இதற்காக அழைப்பிதழ் கொடுப்பது, மண்டபம் முடிவு செய்வது என, அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வந்தன.
இந்நிலையில் கடந்த வாரம், சிவண்ணாவிடம் வந்த உல்லாஸ் கவுடா, 'உங்கள் மகளை நான் காதலிக்கிறேன். அவரை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள்' என, பிடிவாதம் பிடித்தார். இதனால் கோபமடைந்த சிவண்ணா, உல்லாஸ் கவுடாவை திட்டி, அறிவுரை கூறி அனுப்பினார். ஆனால் இதை பொருட்படுத்தாத அவர், தொடர்ந்து தொல்லை கொடுத்தார்.
அதன்பின் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து பேசி, உல்லாஸ் கவுடாவிடம் இருந்த காதல் போட்டோக்கள், திரும்ப பெறப்பட்டன.
ஆனாலும், உல்லாஸ் கவுடா,தனக்கு ரக்ஷிதா அனுப்பிய மெசேஜ்களையும், சில போட்டோக்களையும் அவர் திருமணம் செய்யவிருந்த இளைஞருக்கு அனுப்பினார். அவரை நேரில் சந்தித்து, அனைத்து தகவலையும் கூறி, ரக்ஷிதாவின் குடும்ப கவுரவத்தை குலைத்தார்.
இதனால் தர்ம சங்கடத்துக்கு ஆளான சிவண்ணா, நேற்று காலை தன் மனைவி, மகளுடன் வாழைப்பழத்தில் விஷம் கலந்து சாப்பிட்டு, தற்கொலை செய்து கொண்டனர்.தற்கொலைக்கு முன் அவர்கள் எழுதி வைத்த கடிதத்தில், உல்லாஸ் கவுடாவால் தங்களுக்கு ஏற்பட்ட தொந்தரவை விவரித்திருந்தனர்.
தகவலறிந்து கோபமடைந்த உறவினர்கள், கிராமத்தினர் உல்லாஸ் கவுடாவை கைது செய்தே ஆக வேண்டும் என, பிடிவாதம் பிடித்தனர். தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்களை, போலீசார் கொண்டு செல்லவும், அனுமதி அளிக்கவில்லை. இதனால் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.உல்லாஸ் கவுடா தற்போது தலைமறைவாக உள்ளார்.
அவரை டி.நரசிபுரா போலீசார் தேடி வருகின்றனர்.
