நாகேந்திரா ராஜினாமா வலியுறுத்தி பெங்., விதான் சவுதா இன்று முற்றுகை
நாகேந்திரா ராஜினாமா வலியுறுத்தி பெங்., விதான் சவுதா இன்று முற்றுகை
ADDED : ஆக 23, 2026 11:10 PM

பெங்களூரு: அமைச்சர் நாகேந்திரா ராஜினாமாவை வலியுறுத்தி, பெங்களூரு விதான் சவுதாவை, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி கட்சியினர், இன்று முற்றுகையிட உள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் அசோக், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடில் தொடர்புடைய, அமைச்சர் நாகேந்திரா ராஜினாமாவை வலியுறுத்தி நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம்.
அரசுக்கு நெருக்கடி தர ஒற்றுமையாக பணியாற்றுவோம்; போராட்டத்தை தொடருங்கள் என்று மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார். ம.ஜ.த.,வும் ஆதரவு அளிக்கும் என்றும் கூறினார்.
தலித், பழங்குடியின மக்கள் நாகேந்திராவுக்கு எதிராக திரும்பியுள்ளனர். இதனால், அரசுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாகேந்திராவுக்கு ஆதரவாக சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட பேசவில்லை. நாகேந்திரா மீது சுரங்க கொள்ளை உட்பட 35 வழக்குகள் உள்ளன. ஆனால், 'அவர் மீது எந்த தவறும் இல்லை' என்று முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பரமேஸ்வர் கூறு கின்றனர். குற்றப்பத்திரிகையில் நாகேந்திரா பெயர் இருப்பதால் அவரிடம் விசாரிக்க கவர்னரிடம், சி.பி.ஐ., அனுமதி கேட்டுள்ளது.
நாளை நாகேந்திராவின் ராஜினாமா பெறப்படும். அடுத்த வாரம் முழுதும் சட்டசபையை சுமூகமாக நடத்த அரசு ஒத்துழைக்கும் என நம்புகிறேன்.
அப்படி நடக்காவிட்டால் நாகேந்திரா ராஜினாமாவை வலியுறுத்தி, விதான் சவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
சுதந்திர பூங்காவில் இருந்து, காலை 9:30 மணிக்கு பேரணியாக கிளம்புவோம். காங்கிரசில் நாகேந்திரா மட்டும் தலித் தலைவர் இல்லை. இன்னும் பலர் உள்ளனர். அவர்களில் யாராவது ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
