கர்நாடகாவில் அதிகரிக்கும் வெயில் புழுக்கத்தில் தவிக்கும் மக்கள்
கர்நாடகாவில் அதிகரிக்கும் வெயில் புழுக்கத்தில் தவிக்கும் மக்கள்
ADDED : செப் 08, 2026 03:50 AM
பெங்களூரு: கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. மக்களுக்கு மழைக்காலத்துக்கு பதிலாக, கோடை கால அனுபவம் ஏற்படுகிறது. செப்டம்பர் 16 வரை, இதே சூழ்நிலை நீடிக்கும் என, வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வல்லுநர்கள் கூறியதாவது:
பொதுவாக செப்டம்பரில் குளிர்ச்சி, மேகமூட்டமான சூழ்நிலை இருக்க வேண்டும். ஆனால் இம்முறை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, கோடைக்கால அனுபவத்தை ஏற்படுத்துகிறது. வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
பெங்களூரு, மைசூரு, மாண்டியா மாவட்டங்களில், வெப்பத்தின் அளவு வழக்கத்தை விட, 4 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்துள்ளது. கல்யாண கர்நாடகாவின் கலபுரகி, ராய்ச்சூர் மாவட்டங்களிலும், கடந்த இரண்டு நாட்களாக, வெப்பநிலை அதிகரிக்கிறது.
ராய்ச்சூரில் 35 டிகிரி, கலபுரகியில் 34.8 டிகிரி, மைசூரில் 34 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நிலவுகிறது. பெங்களூரிலும் ஒரு வாரமாக 31.7 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் உள்ளது. வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கு, கர்நாடகாவில் இதே சூழ்நிலை நீடிக்கும். வெயில், ஆங்காங்கே பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யலாம்.
கர்நாடகாவில் மழை மற்றும் மேகங்கள் பற்றாக்குறையே, வெப்பம் அதிகரிக்க காரணமாகும். செப்டம்பர் 16 வரை, இதே நிலை இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
