/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குடிநீரில் கழிவுநீர்மக்கள் பீதி
/
குடிநீரில் கழிவுநீர்மக்கள் பீதி
ADDED : ஜன 18, 2026 05:44 AM
பெங்களூரு: பெங்களூரு வி.எஸ்., கார்டனில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் மக்கள் பீதியில் உள்ளனர்.
பெங்களூரு பாதராயணபுரா வி.எஸ்., கார்டன் பகுதியில், நுாற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் காவிரி நீரையே குடிநீராகவும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். அப்படிப்பட்ட நிலையில், காவிரி நீருடன் கழிவுநீர் கலந்து குழாயில் வருகிறது. மஞ்சள் நிறத்தில் காணப்பட்ட நீரை பார்த்தவர்கள் பீதி அடைந்தனர். மேலும், பக்கெட்டில் பிடித்த நீரில், கொசுவின் முட்டைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நீரை குடித்தால், உடல்நலக் கோளாறுகள் நிச்சயம் ஏற்படும். எனவே, குடிநீர் தேவைக்கு பெங்களூரு குடிநீர் வாரியம் மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் பள்ளம் தோண்டி பைப் லைனில் ஏதாவது உடைந்து உள்ளதா என்பதை ஆராய்ந்து வருகின்றனர். பெரும்பாலும் பைப் லைனில் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே குடிநீருடன் கழிவுநீர் கலக்கும். இதனால், பைப் லைனை சோதனை செய்து வருகின்றனர்.
இதேபோல, ஆண்டின் துவக்கத்திலே பெங்களூரு லிங்கராஜ்புரத்தில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வினியோகிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அந்தப் பிரச்னை விரைவில் தீர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

