ADDED : அக் 09, 2025 04:42 AM

உத்தரகன்னடா மாவட்டம், கார்வாரின் ரவீந்திரநாத் கடற்கரையில், போர் கப்பல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இது, கர்நாடகாவில் உள்ள ஒரே போர்க்கப்பல் மியூசியமாகும். இங்கு நம் படையில் இடம்பெற்ற பழைய விமானங்கள், கப்பல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணியருக்கு மிகவும் பிடித்தமான இடமாக இருக்கும்.
கடந்த 1998ல் தயாரிக்கப்பட்ட, 'டியூபோலெவ் - 142 எம்' விமானம், போருக்கு பயன்படுத்தப்பட்டது. இப்போது அதற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விமானமும் அருங்காட்சியகத்தில் உள்ளது. கடந்தாண்டு உதிரி பாகங்களை இணைத்து, விமானம் முழுமையாக தயார் செய்யப்பட்டது. ஆனால், இதை காண சுற்றுலா பயணியருக்கு, அனுமதி அளிக்கப்படவில்லை.
மீன் வளத்துறை அமைச்சர் மங்கள் வைத்யா, அனைத்து பிரச்னைகளையும் சரி செய்து, அருங்காட்சியை காண, சுற்றுலா பயணியருக்கு அனுமதி அளித்துள்ளார். இதனால் தினமும் அருங்காட்சியை காண, பெருமளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
அமைச்சர் மங்கள் வைத்யா கூறியதாவது:
கார்வார் கடற்கரையில் இருப்பது, மாநிலத்தின் ஒரே போர்க்கப்பல் அருங்காட்சியகமாகும். இங்கு வரும் சுற்றுலா பயணியர், இந்திய கடற்படையின் செயல்பாடு குறித்து, தகவல் தெரிந்து கொள்ளலாம். போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அருகில் இருந்து பார்த்து ரசிக்கலாம்.
உத்தரகன்னடாவில், சுற்றுலா சூடு பிடித்துள்ளது. கார்வாருக்கு வரும் சுற்றுலா பயணியர் இந்த போர்க்கப்பல் அருங்காட்சியகத்துக்கும் வருகின்றனர். இங்குள்ள போர்க்கப்பல், விமானங்களை ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
