/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தொலைபேசி ஒட்டுக்கேட்பு காங்., அரசுக்கு பின்னடைவு
/
தொலைபேசி ஒட்டுக்கேட்பு காங்., அரசுக்கு பின்னடைவு
ADDED : நவ 11, 2025 11:31 PM

பெங்களூரு: ம.ஜ.த., - காங்கிரஸ் ஆட்சியின்போது, எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரி அலோக் குமார் மீது துறைரீதியான விசாரணை நடத்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம் விதித்த தடையை நீக்க, கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கர்நாடகாவில் கடந்த 2019 ம.ஜ.த., - காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஐ.பி.எஸ்., அதிகாரி அலோக் குமார் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இவ்வழக்கு சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை நடத்திய சி.பி.ஐ., அலோக் குமார், குற்றமற்றவர் என்று அறிக்கை சமர்ப்பித்தது. அத்துடன், துறைரீதியாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டிருந்தது.
இந்த அறிக்கையின் அடிப்படையில், மாநில அரசு, துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும் அவரின் பதவி உயர்வும், பிற சலுகைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.
அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, சி.ஏ.டி., எனும் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் அலோக் குமார் முறையிட்டார். விசாரணை நடத்திய தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் ஸ்ரீவஸ்தவா, சந்தோஷ் மெஹ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.
இதனால், இவ் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. சி.ஏ.டி., நீதிபதி ரஞ்சித் வசந்த்ராவ் மோர், 'துறை ரீதியான விசாரணையை ரத்து செய்ததுடன், மனுதாரர் அலோக் குமாருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளும் கிடைக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது. இம்மனு நீதிபதிகள் ஷியாம் பிரசாத், நடாப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பு அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி வாதிட்டார். வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், 'சி.ஏ.டி.,யின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது. இது தொடர்பாக பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வழக்கு விசாரணை டிச., 4ம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது' என்றனர்.
நீதிபதிகளின் உத்தரவால், மாநில காங்கிரசுக்கு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

