ADDED : டிச 26, 2025 06:44 AM

பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட மைசூரை சேர்ந்த கல்லுாரி மாணவி, சமீபத்தில் துபாயில் நடந்த பாரா யூத் ஆசிய விளையாட்டு போட்டியில், நீளம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மைசூரு மேட்டகள்ளியை சேர்ந்த பாரத் - உஷா தம்பதியின் மகள் பாரதி, 18. பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர். மைசூரு ஜி.எஸ்.எஸ்.எஸ்., சிம்ஹா சுப்பமஹாலட்சுமி முதல்நிலை கல்லுாரியில், பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
சைக்கிள் வீரர் இவரின் தந்தை சைக்கிள் விளையாட்டு வீரர் என்பதாலோ என்னவோ, பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட போதும், விளையாட்டின் மீது பாரதி ஆர்வமாக இருந்தார். இதை கவனித்த அவரது தந்தை பாரத், மகளுக்கு விளையாட்டில் பயற்சி அளிக்கத் துவக்கினார். பின், பள்ளிகள், மாவட்டம், மாநில அளவில், 100 மீட்டர் ஓட்ட பந்தயம், ஷாட்புட், நீளம் தாண்டுதல் போட்டிகளில் வெற்றி பெறத் துவங்கினார்.
பல போட்டிகளில் வென்று பதக்கங்கள் பெற்றார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடந்த, பாரா ஜூனியர் தேசிய விளையாட்டு போட்டிகளில், ஷாட்புட், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார். நீளம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்று தேசிய அணியில் இடம் பிடித்தார்.
இதையடுத்து, கடந்த டிசம்பர், 7 ம் தேதி முதல் 14ம் தேதி வரை துபாயில் நடந்த பாரா யூத் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற பாரதி, நீளம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஓட்டப்பந்தயத்திலும் புதிய சாதனை படைத்தார். ஷாட்புட் விளையாட்டில் நான்காவது இடம் பெற்றார்.
பயிற்சி இதுகுறித்து பாரதி கூறியதாவது:
எனக்கு விளையாட்டின் மீது ஆர்வம் இருந்ததை கவனித்த என் தந்தை, தினமும் சாமுண்டி விஹார் மைதானத்துக்கு அழைத்து செல்வார். அங்கு பயிற்சியாளர் சாகர் பயிற்சி அளித்தார். பாரா யூத் ஆசிய விளையாட்டுக்கு தேர்வான பின், ஆறு மாதங்களுக்கு முன் பெங்களூரு அழைத்து செல்லப்பட்டேன். அங்கு தினமும் காலையிலும், மாலையிலும் மூன்று மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுவேன்.
காலையில் விளையாட்டிலும், மாலையில் உடற்பயிற்சி கூடத்திலும் பயிற்சி இருக்கும். பெங்களூரில் பயிற்சியாளர்கள் ரோஷன், விக்ரம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
பெற்றோரின் ஊக்கமும், பயிற்சியாளர்களின் அக்கறையும் தான், நான் பதக்கம் வெல்ல துாண்டுதலாக இருந்தது. சீனியர் அளவில் மாநிலம் சார்பிலும்; பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பிலும் பங்கேற்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -:

