/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
இயற்கை அன்னை தாலாட்டும் கூர்க்கில் பார்க்க வேண்டிய இடங்கள்
/
இயற்கை அன்னை தாலாட்டும் கூர்க்கில் பார்க்க வேண்டிய இடங்கள்
இயற்கை அன்னை தாலாட்டும் கூர்க்கில் பார்க்க வேண்டிய இடங்கள்
இயற்கை அன்னை தாலாட்டும் கூர்க்கில் பார்க்க வேண்டிய இடங்கள்
ADDED : டிச 04, 2025 05:42 AM

: சுற்றுலா என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும். தெரியாதவர்கள் நம் மீது காட்டும் பாசம், புதிய நட்பு, ஏமாற்றம் போன்ற பல அனுபவங்கள் சுற்றுலாவில் மட்டுமே கிடைக்கும்.
ஆண்டுக்கு ஒரு முறையாவது சற்று துாரமாக சென்று, நிறைய இடங்களை சுற்றி பார்த்துவிட்டு வர வேண்டும். அவ்வகையில், கர்நாடகாவில் உள்ள கூர்க் எனும் குடகு மாவட் டத்தில் சுற்றிப் பார்க்க வேண்டிய சில இடங்களை பார்க்கலாம்.
கூர்க் மாவட்டம் மரம், செடி, கொடிகளால் பசுமையாக காட்சி அளிக்கும் இடமாகும். இங்குள்ள காபி தோட்டம், அருவி, வன விலங்குகள் நடமாட்டம், மலை பிரதேசங்கள் மன அமைதியை தரும். குறிப்பாக, மலைப் பிரதேசங்களில் மேக மூட்டங்களுக்கு இடையே நடந்து செல்லும் போது, பூமியில் இருக்கிறோமா அல்லது வானத்தில் இருக்கிறோமா என தோன்றும். அதனாலே, கூர்க்கை சுற்றுலாப் பயணியர், 'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என அழைக்கின்றனர்.
அப்பி அருவி இந்த அருவி பார்ப்போரை பரவசம் அடைய செய்யும் திறனுடையது. அருவியின் அழகு மனதை மயக்கும். தொலைதுாரத்தில் இருந்து பார்க்கும் போது கூட, நீரின் ஓசையை துல்லியமாக கேட்க முடியும்.
இந்த அருவி அடர்ந்த காடு, காப்பி தோட்டங்களின் நடுவில் உள்ளது.புகைப்படம் எடுப்பதற்கு சிறந்த இடம். அருவியின் முன்னே நின்று இரு கைகளையும் துாக்கி கொண்டு பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் சிக்னேச்சர் போஸ் கொடுக்கலாம்.
கூர்க்கில் உள்ள முக்கிய சுற்றுலா தலத்தில் ஒன்று ராஜா சீட். இங்கு சூரிய உதயம், அஸ்தமனம் ஆகியவற்றை கண்டு களிக்கலாம். சூரியனை அருகில் இருந்து பார்ப்பது போன்ற பிரமை நம்மை அறியாமல் மனதில் எழும். பனிமூட்டம் சூழ்ந்த மலைகளில் சூரிய உதயத்தை பார்க்கும் அனுபவத்தை சொல்லி மாளாது.
தலக்காவிரி கர்நாடகா, தமிழக விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்கும் காவிரி நதி உருவாகும் இடமான தலக்காவிரி இங்கு தான் உள்ளது. நதி உருவாகும் இடத்தில் கோவிலும் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் தீர்த்த உத்சவத்தில் பங்கேற்க பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் வருவர். புனித நீரை எடுத்து செல்வர்.
காபி தோட்டங்கள் இந்தியாவில் காபி உற்பத்தி அதிகம் நடக்கும் இடங்களில் கூர்க்கும் ஒன்றாகும். இங்கு பல காபி தோட்டங்கள் உள்ளன. அதை சுற்றி பல ரிசார்ட்கள் உள்ளன. இந்த பகுதியில் வாகனத்தில் செல்லும் போது, வேடிக்கை பார்த்து கொண்டே மகிழ்ச்சியாக செல்லலாம். காலை நேரங்களில் காப்பி தோட்டத்தில் வேலை பார்க்கும் பெண்களை படம் பிடித்து மகி ழலாம்.
மேலும், காபி தயாரிப்பு முறைகள் பற்றி அறிந்து, ஸ்பெஷல் காப்பிகளை குடித்து மகிழலாம்.
இத்தனை சிறப்பு வாய்ந்த கூர்க், தற்போது சுற்றுலா செல்ல ஏற்றதாக இருக்கும். குளிர், மழைக் காலங்களில் சுற்றுலா செல்வது சிறந்த அனுபவமாக இருக்கும். மொத்தத்தில் கூர்க் இயற்கை தாயின் மடியில் தவழும் பகுதியாகும். இங்கு வாழ்வில் ஒரு முறையாவது சென்று வருவது, மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
எப்படி செல்வது? கூர்க்கில் உள்ள இடங்கள் அனைத்திற்கும் பஸ், ரயிலில் சென்று வர முடியாது. எனவே, சொந்த வாகனங்களில் சுற்றுலா செல்வதே சிறப்பாக இருக்கும்.
- நமது நிருபர் -

