UPDATED : ஆக 31, 2026 03:22 AM
ADDED : ஆக 30, 2026 11:24 PM

- நமது நிருபர் -:
பிரதமர் மோடி, தனது 137வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில், பெங்களூரில் தள்ளுவண்டியில் உணவு கடை நடத்தும் நிங்கம்மா, 43, என்பவரை நேற்று பாராட்டினார். 'சாதாரண ஒரு பெண், மத்திய அரசின் பி.எம்., ஸ்வநிதி திட்டத்தை பயன்படுத்தி, வாழ்வில் முன்னேற்றம் அடைந்து உள்ளார்' என புகழாரம் சூட்டினார். இதன் மூலம், நாடு முழுதும் நிங்கம்மா பிரபலமானார்.
கர்நாடகா, ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர் நிங்கம்மா. இவர், பெங்களூரு ஹொசஹள்ளி மெட்ரோ நிலையம் அருகே தள்ளுவண்டி கடையில் சிறிய உணவகம் நடத்துகிறார்.
இந்த கடையை மேம்படுத்த நிங்கம்மாவுக்கு பணம் தேவைப்பட்டது. அப்போது, மத்திய அரசின் பி.எம்., ஸ்வநிதி திட்டம் குறித்து அறிந்து கொண்டார்.
இத்திட்டத்தின் மூலம் தெருவோர வியாபாரிகளுக்கு எவ்வித உத்தரவாதமுமின்றி கடன் வழங்கப்படுகிறது.
இதன் மூலம், நிங்கம்மா முதல் கட்டமாக, 10,000 ரூபாய் கடன் வாங்கினார். வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தியதால் மேலும் 50,000 ரூபாய் வரை கடன் பெற்றார்.
இதை வைத்து தனது கடைக்கு தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை மொத்த விலையில் வாங்கினார். தின்பண்டங்கள் உட்பட புதிய உணவு வகைகளை விற்க துவக்கினார். இதன் மூலம், அவரது கடையின் வருமானம் அதிகரித்தது.
தனது அன்றாட குடும்ப செலவு, பணத்தேவைகளை இவரே சமாளிக்கிறார். யாரையும் நம்பி வாழாமல், தன் உழைப்பில் வாழ்ந்து, சாதாரண பெண்ணும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டி உள்ளார்.
இதனால், பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். இந்தியா முழுதும் அறிந்தவராகி விட்டார். பலரும் சமூக வலைத்தளங்களில் நிங்கம்மா பற்றி பேசத்துவங்கி உள்ளனர்.
