ADDED : ஆக 01, 2026 06:40 AM
பெங்களூரு: கர்நாடகா முழுதும் நாளை நடக்கவிருக்கும், 3,991 போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வுக்கு, கடும் ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
கர்நாடகாவில் 3,991 சிவில் போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான தேர்வு, நாளை நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க 4,54,536 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இத்தேர்வில் முறைகேடு நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை, கே.இ.ஏ., எனும் கர்நாடக தேர்வு ஆணையம் எடுத்து உள்ளது.
இது குறித்து, கே.இ.ஏ., செயல் இயக்குனர் பிரசன்னா கூறியதாவது:
மாநிலம் முழுதும் தேர்வு நடக்கிறது. அனைத்து இடங்களிலும் கடும் கண்காணிப்புக ள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆள்மாறாட்டம் நடப்பதை தடுக்க தேர்வர்களின் முகத்தை ஆய்வு செய்த பின்னரே, தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர்.
தேர்வு மையம், தேர்வு அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். கண்காணிப்பு கேமராக்களுக்கு அந்தந்த மாவட்ட போலீசாரே பொறுப்பு.
தேர்வறைக்கு மொபைல் போன்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல அனுமதியில்லை. செவித்திறன் குறைபாடுள்ள தேர்வர்கள் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.
இவர்கள் பயன்படுத்தும் செவித்திறன் கருவி ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். காது, தலை, முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு அனுமதியில்லை. முழுக்கை சட்டை அணிந்து வர அனுமதியில்லை. மூக்குத்தி, தாலி செயின் மட்டுமே பெண்கள் அணிந்து வர அனுமதி.
மதம் சார்ந்த உடையை அணிந்து தேர்வு எழுத விரும்புவோர் 2 மணி நேரத்திற்கு முன்னதாக, தேர்வு மையத்திற்கு வர வேண்டும். அவர்களிடம் ஆய்வு செய்த பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
