/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பைக் பயணியை உதைக்க முற்பட்ட போலீஸ் எஸ்.பி.,
/
பைக் பயணியை உதைக்க முற்பட்ட போலீஸ் எஸ்.பி.,
ADDED : ஜன 19, 2026 05:26 AM

மைசூரு: முதல்வர் சித்தராமையா, சுத்துார் திருவிழாவில் பங்கேற்று திரும்பும் போது, போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யும் போது, குறுக்கே வந்த பைக் பயணியை, மைசூரு எஸ்.பி., மல்லிகார்ஜுன பாலதன்டி, காலால் எட்டி உதைக்க முற்பட்ட வீடியோ சமூக வலை தளங்களில் பரவியுள்ளது.
மைசூரின் சுத்துார் மடத்தின் திருவிழா மஹோற்சவம், நேற்று நடந்தது. இதில் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாய கருத்தரங்கை, மதியம் 1:30 மணிக்கு முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார். அதன்பின் தன் நண்பர் நரசேகவுடாவின் இறுதி சடங்கில் பங்கேற்க, அவசரமாக புறப்பட்டார்.
திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர். கி.மீ., கணக்கில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. குறுகலான சாலைகளில், முதல்வரின் வாகனம் செல்ல வழி ஏற்படுத்தி தருவதற்குள், போலீசாருக்கு போதும் போதும் என்றானது.
மைசூரு எஸ்.பி., மல்லிகார்ஜுன பாலதன்டி, நேரடியாக அங்கிருந்து போக்குவரத்தை சரி செய்து, முதல்வரின் வாகனத்துக்கு வழி ஏற்படுத்தினார். போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யும் போது, பஸ்சின் குறுக்கே, ஒருவர் பைக் ஓட்டி வந்தார். இதனால் கோபமடைந்த எஸ்.பி., மல்லிகார்ஜுன பாலதன்டி, பைக் நபரை காலால் எட்டி உதைக்க முற்பட்டார்.
இதை பார்த்த சிலர், தங்களின் மொபைல் போனில், வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இது வேகமாக பரவியுள்ளது.

