துரு பிடித்து பாழாகும் பறிமுதல் வாகனங்கள் காயலான் கடைகளாக போலீஸ் நிலையங்கள்
துரு பிடித்து பாழாகும் பறிமுதல் வாகனங்கள் காயலான் கடைகளாக போலீஸ் நிலையங்கள்
ADDED : ஜூலை 21, 2026 02:54 AM

பெங்களூரு: பெங்களூரின் பல்வேறு போலீஸ் நிலையங்கள், பழைய இரும்பு கடைகள் வாங்கும் காயலான் கடைகள் போன்று மாறியுள்ளன. வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், துருப்பிடித்து கிடக்கின்றன.
பெங்களூரில் விபத்து, வாகன திருட்டு, போக்குவரத்து விதிகளை மீறியது உட்பட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், அந்தந்த போலீஸ் நிலையங்களின் முன் பகுதிகள், வளாகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான கார்கள், ஆட்டோக்கள், பைக்குகள் ஆண்டுக்கணக்கில் துாசி படிந்து, துருப்பிடித்து பாழாகின்றன.
நகரின் முக்கியமான போலீஸ் நிலையங்களின் முன் பகுதி, புறநகரில் உள்ள போலீஸ் நிலைய வளாகங்களை பார்த்தால், இவை வாகனம் நிறுத்தும் இடங்களா அல்லது பழைய இரும்பு பொருட்கள் கடைகளா என்ற சந்தேகம் ஏற்படும்.
போலீஸ் நிலையங்களின் வளாகத்தில் இடம் இல்லாத காரணத்தால், பறிமுதல் செய்யும் வாகனங்களை சாலை ஓரத்திலும், நடைபாதைகள் மீதும் வரிசையாக நிறுத்துகின்றனர்.
இதனால் பாதசாரிகள் நடக்க, நடைபாதைகள் இல்லாமல் சாலையிலேயே நடக்க வேண்டியுள்ளது.
ஆண்டுக்கணக்கில் ஒரே இடத்தில் நின்றுள்ள வாகனங்களை சுற்றிலும், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இது, பாம்பு போன்ற விஷ ஜந்துகள் புகலிடமாக மாறியுள்ளன.
எனவே சுற்றுப்பகுதி மக்கள் பயத்துடன் வாழ்கின்றனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள், மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் பாழாகின்றன.
விபத்து அல்லது திருட்டு வழக்குகளில், பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை, உரிமையாளர்களிடம் சேர்க்கப்படாது. சில வழக்குகள் முடிய, ஐந்து முதல் 10 ஆண்டுகளாகின்றன. அபராத தொகை, வாகனத்தின் விலையை விட அதிகமாக இருந்தால், உரிமையாளர்கள் வாகனங்களை மீட்டு செல்ல, ஆர்வம் காட்டுவது இல்லை. இத்தகைய வாகனங்களை முறைப்படி ஏலம் விட வேண்டும்.
ஆனால் அதிகாரிகள் சரியான நேரத்தில் ஏலம் விடாததால், பிரச்னை ஏற்படுகிறது.
சமீபத்தில் பெங்களூரின் சில போலீஸ் நிலைய வளாகத்தில் நின்றிருந்த வாகனங்களில், எதிர்பாராமல் தீப்பிடித்துது நுாற்றுக்கணக்கான வாகனங்கள் தீக்கிரையாகின. இதை தீவிரமாக கருதிய கர்நாடக உயர்நீதிமன்றம், போலீசார் பறிமுதல் செய்யும் வாகனங்களை, ஏலம் விடும்படி உத்தரவிட்டது. ஆனாலும் போலீசார் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.
