விநாயகர் ஊர்வலத்தில் கலவரம் தடுக்க போலீஸ் நடவடிக்கை
விநாயகர் ஊர்வலத்தில் கலவரம் தடுக்க போலீஸ் நடவடிக்கை
ADDED : செப் 09, 2026 11:35 PM

மாண்டியா: ''விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் ஏற்படாமல் தடுப்பதை அனைத்து போலீசாரும் உறுதி செய்ய வேண்டும்,'' என, மாவட்ட எஸ்.பி., ஷோபாராணி தெரிவித்தார்.
மாண்டியா மாவட்டம், நாகமங்களாவில் 2024ல் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மத ரீதியான கலவரம் ஏற்பட்டது. இதில், ஏராளமான கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இச்சம்பவம் மாநிலத்தில் பெரிதாக பேசப்பட்டது. இது போன்ற சம்பவம் வரும் விநாயகர் சதுர்த்தியின் போது ஏற்படக்கூடாது என்பதற்காக தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து உள்ளனர்.
மாவட்ட எஸ்.பி., ஷோபாராணி கூறியதாவது:
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, மாவட்டம் முழுதும் எவ்விதமான அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது. மத ரீதியான மோதல்கள் நிச்சயம் நடக்கக்கூடாது. பணியில் ஈடுபடும் அனைத்து போலீசாரும் உறுதி செய்ய வேண்டும்.
ஊர்வலத்தில் செல்வோர் விதிமுறைகளை கடைப்பிடித்து நடக்க வேண்டும். ஊர்வலம் செல்லும் நாட்களில் ஏராளமான போலீசார் பணியமர்த்தப்படுவர்.
விநாயகர் சிலை வைக்கப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட வேண்டும். இசை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படு கிறது.
திருவிழாவை அமைதியான முறையில் கொண்டாடவும். சட்டம் -- ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
