ADDED : செப் 06, 2026 11:19 PM

- நமது நிருபர் -: 'இலக்கிய அன்னை' என்று அழைக்கப்படும் சாவித்திரிபாய் புலேவை, தனது உத்வேகமாகவும், முன்மாதிரியாகவும் கொண்ட ஆசிரியையான பிரபாவதிக்கு, மாநில அரசின், நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
பெலகாவி மாவட்டம், அகசாகி கிராமத்தை சேர்ந்த பெற்றோர் பாலப்பா - பார்வதி ஆகியோர், விவசாய தம்பதி. பள்ளி படிப்பை முடித்ததும், பெலகாவியில் பி.கே. கல்லுாரியில் பட்டப்படிப்பும், வடகவியில் மராத்தி ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில் டி.சி.எச்., படிப்பையும் முடித்தேன். 1992ல் மராத்தி ஆசிரியராக நியமிக்கப்பட்டேன்.
அரசு துவக்க பள்ளியில், 22 ஆண்டுகள் பணியாற்றினேன். 2016ல், ஜாபர்வாடி மராத்தி உயர் துவக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டேன். 2022ல் இதே பள்ளியின் தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட்டேன். 33 ஆண்டுகள் பணியாற்றிய நான், இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளேன்.
சாவித்திரிபாய் புலே போல ஒரு ஆசிரியையாக வேண்டும் என்று கனவு கண்டேன். ஆசிரியையாகி விட்டேன். அவரின் பெயரில் மாநில அளவிலான நல்லாசிரியர் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த நல்ல வாய்ப்பில் ஆசிரியர்கள், குடும்பத்தினர், என் கிராம மக்கள், துறை அதிகாரிகள் அனைவருக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்.ஏழை மற்றும் திறமையான, 12 குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களை உயர் கல்வி படிக்க வைத்துள்ளேன். ஆரம்பத்தில் இருந்தே எனக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லை. எனவே, நான் என்னை ஆசிரியர் தொழிலுக்கு அர்ப்பணித்து கொண்டேன்.என் சகோதரியின் மகன் அஜித் கவடே, மகள் மஞ்சு கவடே ஆகியோரை என் சொந்த பிள்ளைகள் போல படிக்க வைத்தேன்.
அஜித் கவடே, அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும்; மகள் மஞ்சு கவடே, கே.இ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்று, பைலஹொங்கல் தாலுகாவில் உள்ள மரிகட்டி அரசு பள்ளியில் முதல்வராக உள்ளார்.
பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முன்னாள் மாணவர்கள், கிராம மக்கள், நன்கொடையாளர்கள் பலர் உதவி உள்ளனர். அவர்களின் உதவியுடன் ஸ்மார்ட் 'டிவி'க்கள், கணினியுடன் கூடிய 'ஸ்மார்ட்' வகுப்பறை கட்டப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளேன். எனது ஓய்வுக்குள் இப்பள்ளியை முன்மாதிரி பள்ளியாக மாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
