/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆதார் எண் தராத கைதிகள் சிறை அதிகாரிகள் புலம்பல்
/
ஆதார் எண் தராத கைதிகள் சிறை அதிகாரிகள் புலம்பல்
ADDED : அக் 02, 2025 11:01 PM
பெங்களூரு: சிறையில் உள்ள கைதிகள் மற்றும் அவர்களை சந்திக்க வருவோர், தங்களின் ஆதார் எண்களை தெரிவிப்பதை கட்டாயமாக்கி, 2023 அக்டோபர் 17ல், மத்திய உள்துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவு நாட்டின் அனைத்து மாநிலங்கள், மத்திய ஆட்சி பகுதிகளுக்கும் பொருந்தும் என, கூறப்பட்டது.'இ - ஜெயில்' போர்ட்டலில் உள்ள கைதிகளின் ஐ.டி.,யுடன், ஆதார் எண்ணை இணைக்கும்படி, சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால் கர்நாடகா உட்பட, பல்வேறு மாநிலங்களில் கைதிகளின் ஐ.டி.,யுடன், ஆதார் எண் இணைக்கவில்லை என, தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, சிறை அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த, கைதிகளே இடையூறாக உள்ளனர். கைதி ஐ.டி.யுடன் லிங்க் செய்ய, ஆதார் எண்ணை தராமல் அலட்சியம் காட்டுகின்றனர்.
கைதி ஐ.டி.,யுடன், ஆதார் எண் இணைக்கப்பட்டால், கைதிகள் கண்காணிக்கப்படுவர் என்பதால், ஆதார் எண்ணை தெரிவிக்க அவர்கள் தயங்குகின்றனர்.
ஆதார் கார்டு தொலைந்து போனதாக, பொய் சொல்கின்றனர். ஆதார் எண்ணை தரும் கைதிகளின் தகவல்களை மட்டுமே, இ - ஜெயில் போர்ட்டலில் இணைக்கிறோம்.
கைதிகளின் ஆதார் எண்ணை, ஐ.டி.,யுடன் இணைப்பது குறித்து, மாநில அரசு தெளிவான விதிமுறைகள் வகுக்கவில்லை. இதனால் எங்களால், கைதிகளிடம் ஆதார் எண்ணை கேட்டு வலியுறுத்த முடியவில்லை. தாமாக முன் வந்து கைதிகள் தெரிவிக்கும் ஆதார் எண்களை, ஐ.டி.,யுடன் இணைக்கிறோம்.
குற்றவாளிகளை கைது செய்யும் போது, போலீசாரே அந்நபரின் விபரங்களை சேகரிப்பது நல்லது. அந்த தகவல்களை எங்களிடம் தெரிவித்தால், கைதியின் ஆதார் எண்ணை, ஐ.டி.,யுடன் இணைக்க உதவியாக இருக்கும்.
இ -ஜெயில் போர்ட்டலில், கைதிகளின் கைரேகையை பதிவிடும் வசதியை செய்யும்படி, அரசிடம் கோரினோம். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. கைரேகை இருந்தால், கைதியின் அனைத்து தகவல்களும் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.