ஆர்.எஸ்.எஸ்., குறித்து அவதுாறு கருத்து பிரியங்க் கார்கே, நலபாடுக்கு ஜாமின்
ஆர்.எஸ்.எஸ்., குறித்து அவதுாறு கருத்து பிரியங்க் கார்கே, நலபாடுக்கு ஜாமின்
ADDED : ஆக 29, 2026 11:21 PM

பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ்., குறித்து அவதுாறாக பேசிய அமைச்சர் பிரியங்க் கார்கே, காங்கிரஸ் இளைஞர் பிரிவு முகமது நலபாடு ஆகியோருக்கு, பெங்களூரு 42வது ஏ.சி.ஜே.எம்., நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த 2025 அக்., 14 ல் அமைச்சர் பிரியங்க் கார்கே, ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினர்களுக்கு எதிராக இழிவான பதிவுகளை வெளியிட்டார். அதுபோல, முகமது நலபாடும், கருத்துகளை தெரிவித்தார்.
இது தொடர்பாக, சித்தாபூரை சேர்ந்த தேஜஸ் என்பவர் அளித்த புகாரில், 'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இழிவான கருத்துகளை தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று புகார் அளித்திருந்தார்.
இவ்வழக்கு பெங்களூரு 42வது ஏ.சி.ஜே.எம்., நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த ஜூலை 21ல் நடந்த விசாரணைக்கு ஆஜராகும்படி இருவருக்கும், சம்மன் அனுப்பியிருந்தும், ஆஜராகவில்லை. சதாசிவ நகர், அசோக் நகர் போலீசாரின் அறிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், இருவரும் நேற்று ஆஜராக வேண்டும் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவருக்கும் தலா, 10 ஆயிரம் ரூபாய்க்கான தனிநபர் உத்தரவாதம் தொகை செலுத்த கூறிய நீதிமன்றம், இருவருக்கும் ஜாமின் வழங்கியது.
