போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் புதிய நடைமுறைக்கு பிரியங்க் விருப்பம்
போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் புதிய நடைமுறைக்கு பிரியங்க் விருப்பம்
ADDED : ஜூன் 14, 2026 11:33 PM

பெங்களூரு: கர்நாடகாவில் எம்.எல்.ஏ.,க்களின் சிபாரிசு கடிதங்கள் இல்லாமல், கல்வித்துறை, சுகாதாரத்துறை போல, போலீஸ் துறையிலும் அதிகாரிகள் இடமாற்றத்துக்கு, கவுன்சலிங் நடைமுறையை செயல்படுத்த, உள்துறை ஆலோசிக்கிறது.
போலீஸ் துறை இடமாற்றம் குறித்து, உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, உயர் போலீஸ் அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தினார். கல்வித்துறை, சுகாதாரத்துறையில் இருப்பதை போல, போலீஸ் துறையிலும் அதிகாரிகள் இடமாற்றத்துக்கு, கவுன்சலிங் நடைமுறையை செயல்படுத்த, அமைச்சர் ஆர்வம் காட்டுகிறார். அதிகாரிகளிடம் தகவல் கேட்டறிந்தார்.
கடந்த 2011ல் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி, மாநிலத்தில் போலீஸ் இடமாற்றம் குறித்து, போலீஸ் டி.ஜி.பி., தலைமையில், பி.இ.பி., எனும் 'போலீஸ் எஸ்டாப்லிஷ்மென்ட் போர்டு' அமைக்கப்பட்டது.
ஆனால் இந்த வாரியம், ஆளுங்கட்சியின் சிபாரிசுக்கு முத்திரை குத்தும் வேலையை மட்டும் செய்கிறது என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகாரிகள் இட மாற்றத்தில். சுதந்திரமாக செயல்படும் நடைமுறையை வகுக்க வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது.
குறிப்பாக, இன்ஸ்பெக்டர், டெபுடி எஸ்.பி., ஏ.சி.பி.,க்கள் இட மாற்றத்தில் அரசியல் தலையீடு உள்ளதாக கூறப்படுகிறது. ஒன்பது மாதங்களாக இழுபறியில் இருந்த இன்ஸ்பெக்டர்கள், டெபுடி எஸ்.பி.,க்கள் கூட்டாக இட மாற்றம் செய்யப்பட்டனர். அரசியல் சிபாரிசுகள் இல்லாமல், தகுதி அடிப்படையில் இட மாற்றம் செய்யும் நோக்கில், கவுன்சலிங் நடைமுறையை கொண்டு வருவது, அமைச்சர் பிரியங்க் கார்கேவின் எண்ணமாகும்.
ஆனால் இதற்கு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சம்மதிப்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, முதலில் எம்.எல்.ஏ.,க்களிடம் பேச்சு நடத்தி, அவர்களின் கருத்துக்களை கேட்டறிய, அமைச்சர் முடிவு செய்துள்ளார்.
இதற்கு முன் கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகள் இடமாற்றம், அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. குறிப்பாக, பஞ்சாயத்து மேம்பாடு அதிகாரிகள் இடமாற்றத்தில், அரசியல்வாதிகளின் தலையீடு மிகவும் அதிகமாக இருந்தது.
இதை கவனித்த பிரியங்க் கார்கே, கிராம மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகள் இடமாற்றத்தில், கவுன்சலிங் முறையை அமல்படுத்தினார். இப்போது போலீஸ் துறையிலும், எம்.எல்.ஏ.,க்களின் சிபாரிசை பொருட்படுத்தாமல், கவுன்சலிங் நடைமுறையில் இடம் மாற்ற ஆலோசிக்கிறார்.
