பால் பாக்கெட்டிலிருந்து பொருட்கள் ஐ.ஐ.எஸ்சி., விஞ்ஞானிகள் முயற்சி
பால் பாக்கெட்டிலிருந்து பொருட்கள் ஐ.ஐ.எஸ்சி., விஞ்ஞானிகள் முயற்சி
ADDED : ஆக 15, 2026 11:28 PM

- நமது நிருபர் -:
ஒவ்வொரு நாளும் பெரும்பாலான இந்திய வீடுகளுக்கு வாங்கப்படும் மிகவும் பொதுவான மளிகைப் பொருட்களில் பால் பாக்கெட்டுகளும் ஒன்றாகும். இருப்பினும், அவற்றின் பரவலான பயன்பாடு, நாடு முழுதும் ஆயிரக்கணக்கான டன் நெகிழி கழிவுகளை உருவாக்கி வருகிறது. பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகள், இப்பிரச்னைக்கு தீர்வு கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
பொதுவாக பாலிஎத்திலீனால் தயாரிக்கப்படும் பால் பாக்கெட்டுகள், குப்பையில் வீணாவதற்கு பதிலாக, இனி இருக்கைகள் மற்றும் பல்வேறு கட்டுமான பொருட்களை தயாரிக்க மறுசுழற்சி செய்யப்படும்.
ஐ.ஐ.எஸ்சி-.,யின் பிராடெக்ட் இன்ஜினியரிங் டிபார்ட்மென்ட் எனும் பொருள் பொறியியல் துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பான ஒரு ஆய்வுக் கட்டுரை மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.
ஐ.ஐ.எஸ்சி., குழுவின் பேராசிரியர் சூர்யசாரதி போஸ் கூறியதாவது:
நாட்டில் தினமும், 10 முதல், 12 கோடி ஒரு முறை பயன்படுத்தும் பால் பாக்கெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இது, நாட்டின் மொத்த பால் பொட்டல பயன்பாட்டில் ஏறக்குறைய பாதியாகும்.
குப்பை தொட்டிகள், சாலையோரங்களில் பால் பாக்கெட்டுகளை நீங்கள் காணலாம். அவை நீண்ட காலத்துக்கு குப்பையாகவே கிடக்கும். எனவே தான், இந்த ஆராய்ச்சிக்காக அவை தேர்ந்தெடுக்கப்பட்டன.
நெகிழி பாட்டில்கள் போன்ற மற்ற கழிவுகள் நல்ல விலை கிடைப்பதால், பழைய பொருட்களை சேகரிப்பவர்கள் விரைவாக சேகரிக்கின்றனர்.
நேரடி சூரிய ஒளி மற்றும் புற ஊதா கதிர்களை தடுத்து, பாலின் சேமிப்பு காலத்தை நீட்டிக்க, இந்த அடர் நிற அடுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதனால் மறுசுழற்சி செய்யும் கட்டத்தில் கூட, பால் பாக்கெட்களின் உள் அடுக்கில் உள்ள அடர்த்தியான நிற பிளாஸ்டிக்கை மறுசுழற்சி நிறுவனங்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை.
மறு சுழற்சியின் போது, பால் பாக்கெட்களில் உள்ள பாலிஎத்திலீன், எண்ணெய் மற்றும் ஷாம்பு பாக்கெட்களில் பயன்படுத்தப்படும் பாலிபுரோப்பிலீன் எனப்படும் மற்றொரு பொருளுடன் இணைக்கப்படுகிறது.
மூலக்கூறு மட்டத்தில் அவை வேறுபட்டிருந்தாலும், 'வைட்ரிமர்கள்' எனப்படும் சிறப்பு மூலக்கூறுகளின் உதவியுடன் இந்த இரண்டு பொருட்களும் இணைக்கப்பட்டு, ஒரு புதிய மறுசுழற்சி பொருள் உருவாக்கப்படுகிறது.
பால் பாக்கெட்டுகளை கலந்து, வெளிப்புறங்களில் பயன்படுத்தக் கூடிய உறுதியான பொருளை ஏன் உருவாக்க கூடாது என்று யோசித்தோம். இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், கலையரங்குளில் பயன்படுத்துவதற்காக, '3 டி' அச்சிடப்பட்ட மேடைகளை எங்களால் உருவாக்க முடிகிறது.
அத்தகைய ஒரு மேடை இப்போது சோதனை பயன்பாட்டிற்காக, ஐ.ஐ.எஸ்சி.,க்கு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த மறுசுழற்சி பொருளை, மேடைகளை மட்டுமின்றி, இருக்கைகள் போன்ற பல்வேறு வெளிப்புற தளவாடங்களையும் தயாரிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
