/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பசவ மெட்ரோ' என பெயர் மாற்றம் மத்திய அரசுக்கு பரிந்துரைக்க திட்டம்
/
'பசவ மெட்ரோ' என பெயர் மாற்றம் மத்திய அரசுக்கு பரிந்துரைக்க திட்டம்
'பசவ மெட்ரோ' என பெயர் மாற்றம் மத்திய அரசுக்கு பரிந்துரைக்க திட்டம்
'பசவ மெட்ரோ' என பெயர் மாற்றம் மத்திய அரசுக்கு பரிந்துரைக்க திட்டம்
ADDED : அக் 06, 2025 05:42 AM

பெங்களூரு : ''பெங்களூரு நம்ம மெட்ரோவுக்கு 'பசவ மெட்ரோ' என பெயர் சூட்ட, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடந்த 'பசவ கலாசார பிரசாரம் - 2025' நிறைவு விழாவில், முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
நான் பசவண்ணரின் ரசிகன். அவரின் தத்துவத்தில் நம்பிக்கை, விசுவாசம் உள்ளது. தன் வாழ்நாள் முழுதும் சகவாழ்வு, சகிப்பு தன்மையை போதித்தார். அதையே நானும் பின்பற்றுகிறேன். பசவ ஜெயந்தி நாளில் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றேன்.
இதனால் தான், அனைத்து அரசு அலுவலகங்களிலும் பசவண்ணர் படங்கள் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தேன். ஜாதியால் யாரும் உயர்ந்தவர்கள் அல்ல. இதுபோன்று திறமையும், அறிவும் எந்தவொரு ஜாதிக்கும் சொந்தமானதல்ல.
முதலில் நாம் மனிதர்கள்; பின் இந்தியர்கள். மனிதனால் உருவாக்கப்பட்ட ஜாதி, மதம், சமத்துவமின்மை போன்ற பாகுபாடுகளை ஏற்க கூடாது. நாம் அனைவரும் சூத்திரர்கள். 'சமத்துவமின்மை நீங்கவில்லை என்றால், சமூகங்கள், சுதந்திர நினைவு சின்னத்தை அழித்துவிடும்' என்று அம்பேத்கர் கூறியதை நினைவில் கொள்ள வேண்டும்.
பெங்களூரு நம்ம மெட்ரோவுக்கு 'பசவ மெட்ரோ' என பெயர் சூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். மெட்ரோ ரயில் போக்குவரத்து திட்டம் மாநில அரசின் திட்டமாக இருந்தால், இன்றே மாற்றி இருப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
n மதத்தை விட நாடு தான் முதன்மை யானது. தேசிய உணர்வுடன் நாட்டின் ஒற்றுமைக்கு பாடுபட வேண்டும்
n பசவேஸ்வரா, பசாவதி சரண் ஆகியோரால், 12ம் நுாற்றாண்டில் லிங்காயத் மதம் உருவாக்கப்பட்டது. புத்த மதம், சமண மதம், சீக்கிய மதம் போன்றோர் பெறும் அரசின் சலுகைகளை பெற முயல வேண்டும்
n லிங்காயத்களில் உள்ள சிறிய, பின் தங்கிய துணை ஜாதிகளை அரவணைத்து, அவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும்
n லிங்காயத்கள் பிறப்பு முதல் இறப்பு வரை தங்கள் வீடுளில் சரண் கலாசார சடங்குகளை பின்பற்ற வேண்டும்.
உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி நாகமோகன் தாஸ் பேசியதாவது:
லிங்காயத்தை தனி மதமாக அறிவிக்க வேண்டுமென, என் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி சிபாரிசு செய்திருந்தது. இதன் அடிப்படையில், மாநில அரசு, மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது. ஆனால் மத்திய அரசு திருப்பி அனுப்பியது. மாநில அரசு தேவையான விளக்கங்களுடன், மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்ப வேண்டும்.
லிங்காயத் சமுதாயத்துக்கு, தனி மதம் அங்கீகாரம் கிடைக்கும் வரை, சமுதாயத்தினர் தங்களின் போராட்டத்தை தொடர வேண்டும். போராட்டத்தில் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை அடையாளம் காண வேண்டும். எதிரிகளின் தோள் மீது கை போட்டு, பக்கத்தில் அமர்த்தி கொண்டு, போராட்டம் நடத்தினால், அது வெற்றி பெறாது. சமமான மனநிலை கொண்டவர்களுடன் இணைந்து போராடினால், நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த 2013ல், காங்கிரஸ் அரசில் சித்தராமையா முதல்வராக இருந்த போது, தனி லிங்காயத் மதம் வேண்டும் என, போராட்டம் நடந்தது. அரசின் சில அமைச்சர்களே, போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தனர். இதை தொடர்ந்து நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
இதற்கு, தனி லிங்காயத் மதம் போராட்டமே காரணம் என, சிவகுமார் உட்பட, பலர் கருத்து தெரிவித்திருந்தனர். ஏழு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த விவாதம், தற்போது மீண்டும் கிளறப்பட்டுள்ளது.
விழா மேடையில், மாநிலத்தின் பல்வேறு மடாதிபதிகள், அரசியல் தலைவர்கள் இருந்தனர். இவர்கள், நீதிபதியின் பேச்சை கை தட்டி வரவேற்றனர்.