ஆண்மையை இழந்ததால் விபரீதம் 'பப்' ஊழியர் துாக்கிட்டு தற்கொலை
ஆண்மையை இழந்ததால் விபரீதம் 'பப்' ஊழியர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஜூலை 15, 2026 12:34 AM

விவேக்நகர்: ஆண்மையை இழந்தது தெரிய வந்ததால் மனஉளைச்சலில் இருந்த, பப்ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் தபன் நாத், 27. பெங்களூரு கோரமங்களாவில் உள்ள 'பப்' ஒன்றில் ஊழியராக வேலை செய்தார். ஈஜிபுராவில் வாடகை வீட்டில் வசித்தார். கடந்த மார்ச் மாதம் மடிவாளாவில் உள்ள நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு நடந்த மது பார்ட்டியின் போது ஏற்பட்ட தகராறில், தபன் நாத்தின் மர்ம உறுப்பில், நண்பர்கள் பலமாக மிதித்தனர்.
வலி அதிகமாக இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆண்மையை இழந்து விட்டதாக கூறினர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தபன் நாத், இதுபற்றி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் பெண் பார்த்து வந்துள்ளனர். திருமணம் நடந்தாலும் தந்தையாக முடியாதே என்று மன உளைச்சலில் இருந்தார்.
சில தினங்களுக்கு முன், தன்னுடன் வேலை செய்யும் பிரஜ்வல் என்பவரிடம் மட்டும், ஆண்மையை இழந்தது பற்றி தபன் நாத் கூறியுள்ளார். டில்லிக்கு சென்று சிகிச்சை எடுக்க உள்ளதாகவும் கூறி இருக்கிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றிருந்த நண்பர், வீட்டிற்கு சென்று பார்த்த போது, அறையில் தபன் நாத் துாக்கில் பிணமாக தொங்கினார்.
விவேக்நகர் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆண்மையை இழந்ததால் தற்கொலை செய்தது தெரிந்தது. அவரது மர்ம உறுப்பில் எட்டி உதைத்த நண்பர்களிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர்.
