ADDED : ஜூலை 14, 2026 09:28 PM

பெங்களூரு: ''காங்கிரஸ் ராகுல், 40 நாட்களாக காணாமல் போய் விட்டார்,'' என, கர்நாடகாவை சேர்ந்த, மத்திய, உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியுள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
விஜயேந்திராவை, 'பேபி எடியூரப்பா' என்று, காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் கிண்டல் செய்துள்ளார். அப்படி என்றால் ராகுலை, 'பேபி காந்தி' என நாங்கள் அழைப்போம். தலைநகர் டில்லி மற்றும் நாட்டில் எங்கும் இல்லாமல், கடந்த 40 நாட்களாக அவர் காணாமல் போய் விட்டார்.
இதனால் கர்நாடக அரசின் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய தாமதம் ஏற்படுகிறது.
மழையின்மையால் விவசாயிகள் கஷ்டங்களை அனுபவிக்கும் நேரத்தில், அவர்களை சந்தித்து ஆறுதல் கூற யாரும் வரவில்லை. தார்வாட் மாவட்ட பொறுப்பு அமைச்சரான ஈஸ்வர் கண்ட்ரே என்ன செய்கிறார் என தெரியவில்லை. வறட்சி நிலவரம் குறித்து கணக்கெடுப்பு நடத்தவில்லை.
எஸ்.ஐ.ஆர்., விவகாரத்தில் மாநில அரசு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. கடினமான சூழ்நிலையில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பணி செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
